ஐபிஎல் 2025 கிரிக்கெட் கோப்பையை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாதனை படைத்தது. அந்த சாதனையை விராட் கோலி மற்றும் பெங்களூரு ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாட்டினார்கள். ஆனால் அந்த கொண்டாட்டம் ஒருநாள் கூட நீடிக்கவில்லை. ஏனெனில் 18 வருடங்கள் கழித்து பெற்ற வெற்றியை ஆர்சிபி அணி தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருவில் ரசிகர்களுடன் திறந்த வெளிப் பேருந்தில் கொண்டாட முடிவெடுத்தது.
இருப்பினும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பெங்களூரு மாநகரக்காவல் அதை மறுத்து விட்டது. அதன் காரணமாக சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியினர் வெற்றியைக் கொண்டாடினார்கள். அதைக் காண்பதற்கு வெளியே லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் நெரிசல் ஏற்பட்டது.
அவசரம் என்ன:
அவர்களை காவலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் காரணமாக ஏற்பட்ட பெரிய நெரிசலில் 11 ரசிகர்கள் இயற்கை எய்தியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் இதற்கு பேசாமல் ஆர்சிபி கோப்பையை வெல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த சோகமான நிகழ்வுக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசு தான் காரணம் என்று மதன் லால் சாடியுள்ளார்.
1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “11 உயிர்கள் இழந்தது துரதிஷ்டவசமானது. இப்படி ஒரு சோகம் நடந்திருக்கக்கூடாது. இது தவிர்க்கப்பட வேண்டியது. அகமதாபாத் நகரில் பெங்களூரு அணி செவ்வாய்க்கிழமை இரவு வெற்றியைக் கொண்டாடினார்கள். அதற்குள் பெங்களூருவில் கொண்டாடுவதற்கு என்ன அவசரம்?”
2 நாட்கள் கழிச்சு:
“இதற்காக யாரைக் குறை சொல்வது? ஒருவேளை மாநில அரசு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால் இந்த கொண்டாட்டம் நடந்திருக்காது. எனவே இதற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். இது ஆர்சிபி அணியின் தவறாகும். அவர்கள் வெற்றி பெற்ற 4 மணி நேரத்தில் பொதுமக்களுடன் கொண்டாட முடிவு செய்தார்கள். அப்படி என்ன அவசரம்? பெங்களூரு அணி நிர்வாகம் பெரிய தவறு செய்துள்ளார்கள்”
இதையும் படிங்க: எம்.எஸ் தோனிக்கு பிறகு இரண்டாவது ஐ.பி.எல் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய சோகமான சாதனை – விவரம் இதோ
“இந்தக் கொண்டாட்டங்களை 2 – 3 நாட்கள் கழித்து வைத்திருக்கலாம். ரசிகர்களுக்கு நீங்கள் சரியான நேரத்தையும் இடத்தையும் கொடுத்திருக்கலாம். 2 – 3 நாட்கள் கழித்து கொண்டாடினால் அப்போதும் ரசிகர்கள் வந்திருப்பார்கள். அப்படி திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இது போன்ற மோசமான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்கலாம். இதற்கு பிசிசிஐ’யை குற்றம் சொல்ல முடியாது. ஆர்சிபி அணி மாநில அரசுடன் இணைந்து வேலை செய்திருக்க வேண்டும். சோகம் என்னவெனில் நம்முடைய நாட்டில் மனித உயிர்கள் குறைத்து மதிப்பிடப்படுவது தொடர்கிறது” என்று கூறினார்.



