ஐபிஎல் 2023 ஏலம் : ராகுல் – கம்பீர் தலைமையில் சரித்திரம் படைக்க தயாராகும் லக்னோ, தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்களின் பட்டியல்

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டை மிஞ்சக்கூடிய பரபரப்பான த்ரில்லர் திருப்பங்களை விருந்து படைக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை ஐபிஎல் நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. அதன் முக்கிய பகுதியாக இந்த வருடம் ஏற்கனவே மெகா ஏலம் நடைபெற்றதால் 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தை சிறிய அளவில் அதாவது மினி அளவில் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் இறுதிப்பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.

Gautam Gambhir LSG

- Advertisement -

அதை தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதியன்று அனைத்து அணிகளும் தங்களுடைய இறுதிப் பட்டியலை வெளியிட்ட நிலையில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம் நம்பிக்கை நட்சத்திரத்தில் ராகுல் தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வருங்கால கேப்டன் என்று கருதப்படும் கேஎல் ராகுல் தலைமையில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆலோசனையில் இந்த வருடம் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பதிவு செய்த லக்னோ அணி முதல் வருடத்திலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

லக்னோ அணி:

ஆனால் நாக் அவுட் போட்டியில் பெங்களூருவிடம் தோற்று முதல் வருடத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட அந்த அணி இம்முறை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு 2வது சீசனில் சரித்திரம் படைக்க தயாராகியுள்ளது. அதற்கு முதலாவதாக சமீப காலங்களில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பெரிய பின்னடைவை கொடுப்பதுடன் சுமாரான ஃபார்மில் தவிக்கும் மனிஷ் பாண்டேவை கழற்றி விட்டுள்ள அந்த அணி வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் ஜேசன் ஹோல்டரையும் விடுவித்துள்ளது.

LSG KL Rahul

அது போக ஆண்ட்ரூ டை, துஷ்மந்தா சமீரா, எவின் லிவிஸ் உட்பட மொத்தம் 7 தேவையற்ற வீரர்களை விடுவித்துள்ளது. இருப்பினும் ராகுல் தலைமையில் குயின் டீ காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, கெய்ல் மேயர்ஸ், ஆயுஷ் படோனி போன்ற போன்ற முக்கிய வீரர்களை தக்க வைத்து பேட்டிங் துறையை வலுப்படுத்தியுள்ள அந்த அணி மார்க் வுட், மோசின் கான், ஆவேஷ் கான், க்ருனால் பாண்டியா ஆகிய முக்கிய வீரர்களை வெளியே விடாமல் பந்து வீச்சு துறையையும் பலப்படுத்த முயற்சித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மொத்தம் 15 வீரர்களை 71.65 கோடி ரூபாய் செலவில் தக்க வைத்துள்ள அந்த அணி 7 வீரர்களை விடுவித்து 23.35 கோடிகளை மிச்சப்படுத்தியுள்ளது. அந்த தொகையை பயன்படுத்தி வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் அதிகபட்சமாக காலியாக உள்ள 10 வீரர்களுக்கான இடத்தை நிரப்ப அந்த அணி தயாராகியுள்ளது. அந்த 10 இடங்களில் அந்த அணியால் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். எனவே அந்த ஏலத்தில் கச்சிதமான வீரர்களை தேர்வு செய்து இந்த வருடம் விட்ட கோப்பையை அடுத்த வருடம் பிடிக்க ராகுல் – கௌதம் கம்பீர் ஆகியோர் தலைமையிலான லக்னோ அணி தயாராகியுள்ளது.

LSG vs DC

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் சர்மா, மன்னன் வோஹ்ரா, குயின்டன் டீ காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கெளதம், தீபக் ஹூடா, கெய்ல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, ஆவேஷ் கான், மோசின் கான், மார்க்வுட், மயங் யாதவ், ரவி பிஷ்ணோய்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : பண்ட் தலைமையில் பட்டாசாக செயல்பட டெல்லி தக்க வைத்த – விடுவித்த வீரர்களின் பட்டியல்

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: அண்ட்ரூ டை, அன்கிட் ராஜ்பூட், துஷ்மந்தா சமீரா, எவின் லெவிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, ஷபாஸ் நதீம்

Advertisement