
ஐபிஎல் தொடரில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 45-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோவுக்கு அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்ஸர் பறக்க விட்டு 23 (13) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
5-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 15 ஓவர்கள் வரை நின்று டெல்லி பவுலர்களை அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். 2-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோவை நல்ல நிலையை எட்ட வைத்த இந்த ஜோடியில் 6 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 52 (34) ரன்கள் எடுத்து தீபக் ஹூடா ஆட்டமிழந்தார்.
கலக்கல் ராகுல்:
மறுபுறம் ஏற்கனவே 2 சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் ராகுல் அதிரடியாக 4 பவுண்டரி 5 சிக்சர்களையும் பறக்கவிட்டு 77 (51) ரன்கள் குவித்து 19-வது ஓவரில் ஒரு வழியாக ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்டோனிஸ் 17* (16) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 195/3 ரன்கள் சேர்த்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக சர்தூல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 196 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு கடந்த போட்டிகளில் சரவெடியான தொடக்கம் கொடுத்த பிரித்திவி ஷா 5 (7) டேவிட் வார்னர் 3 (4) என ஒற்றை இலக்க ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
அதனால் 13/2 என சரிந்த டெல்லியை அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு 3-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் அதிரடியான பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றப் போராடினர். அப்போது 3 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (20) ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே இளம் வீரர் லலித் யாதவ் 3 (4) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினாலும் மறுபுறம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடி காட்டிய கேப்டன் ரிஷப் பண்ட் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (30) ரன்கள் எடுத்து அவுட்டானர்.
டெல்லி தோல்வி:
அந்த சூழ்நிலையில் 120/5 என தவித்த டெல்லிக்கு கடைசி 7 ஓவர்களில் வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்பட்டபோது இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவல் 3 பவுண்டரி 2 சிக்சருடன் மிரட்டலாக 35 (21) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தது டெல்லிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்போது வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது அக்ஷர் பட்டேல் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சர் உட்பட 42* (24) ரன்களை எடுத்தாலும் அவருக்கு கை கொடுக்க இதர பேட்ஸ்மென்கள் இல்லாத நிலையில் குல்தீப் யாதவ் 16* (8) ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.
ஆனாலும் 20 ஓவர்களில் 189/7 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி போராடி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாய் தோற்றது. வார்னர் போன்ற முக்கியமான பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்க தவறியதால் கடைசியில் அக்சர் படேலின் போராட்டம் டெல்லிக்கு உதவாமல் போனது. அதனால் பங்கேற்ற 9 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த டெல்லி 6-வது இடத்திற்கு பின்தங்கியது.
தைரியாமன் லக்னோ:
மறுபுறம் லக்னோ சார்பில் அதிகபட்சமாக இளம் வீரர் மோசின் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் வென்றதும் உடனடியாக எந்தவித யோசனையுமின்றி முதலில் பந்து வீச தீர்மானித்து அதன்பின் சேசிங் செய்தால் பாதுகாப்பாக வெற்றி பெறலாம் என நினைக்கும் கேப்டன்களுக்கு மத்தியில் தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக கேஎல் ராகுல் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதற்கேற்றார் போல் பேட்டிங்கில் சொதப்பாமல் அவரே பெரிய 77 என்ற பெரிய ரன்களை எடுக்க தீபக் ஹூடா (52) போன்ற இதர வீரர்கள் கை கொடுத்ததால் 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயத்தபோதே லக்னோவின் வெற்றி பாதி உறுதியானது. அத்துடன் டேவிட் வார்னர், பிரிதிவி ஷா போன்ற அதிரடியான தொடக்க வீரர்களை ஒற்றை இலக்க ரன்களிலும் ரிஷப் பண்ட், மிச்செல் மார்ஷ், ரோவ்மன் போவெல் போன்ற அதிரடி வீரர்களை பெரிய ரன்களை எடுக்க விடாமலும் செய்த லக்னோவின் பவுலர்கள் மீதி வெற்றியை உறுதி செய்து அசத்தினார்கள். இதனால் பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த லக்னோ 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து தனது வெற்றிநடையை தொடர்கிறது.