RR vs LSG : அரிதாக சொதப்பிய பட்லர், அதிரடி ராஜஸ்தானை குறைந்த இலக்கை துரத்த முடியாமல் லக்னோ மடக்கியது எப்படி

- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 1 ரன் கூட எடுக்காமல் தடவியதை பயன்படுத்திய ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரையே மெய்டன் ஓவராக வீசி மிரட்டினார்.

இருப்பினும் கெய்ல் மேயர்ஸ் உடன் இணைந்து நங்கூரமாக செயல்பட்ட ராகுல் 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (32) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஆயுஷ் படோனி 1 (4), தீபக் ஹூடா 2 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மறுபுறம் நங்கூரமாக ரன்கள் குவித்த கெய்ல் மேயர்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 51 (42) ரன்களில் அஸ்வின் சுழலில் போல்ட்டானார்.

- Advertisement -

சொதப்பிய ராஜஸ்தான்:
அதனால் 104/4 என தடுமாறிய லக்னோவுக்கு கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட மார்க்கஸ் ஸ்டானிய்ஸ் 2 பவுண்டரியுடன் 21 (16) ரன்களும் நிக்கோலஸ் பூரான் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 29 (20) ரன்களும் எடுத்த போதிலும் 20 ஓவரில் 154/7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பந்து வீச்சில் அசத்திய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 155 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பம் முதலே நிதானமாக செயல்பட்டு 11.3 ஓவர்கள் வரை ஜோஸ் பட்லருடன் இணைந்து 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த யசஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 (35) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட முயற்சித்தும் அவசரப்பட்டு 2 (4) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே அரிதாக தடுமாற்றமாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (41) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மயரும் தடுமாறி 2 (5) ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது தேவ்தூத் படிக்கல் – ரியன் பராக் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 5வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினர். அதனால் ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரியான் பராக் 2வது பந்தில் சிங்கள் எடுக்க 3வது பந்தில் தேவ்தூத் படிக்கல் 26 (21) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார்.

போதாக்குறைக்கு அடுத்து வந்த இளம் வீரர் துருவ் ஜுரேல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ராஜஸ்தானின் வெற்றி பறிபோனது. இறுதியில் ரியன் பராக் 15* (12) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 144/6 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் போராடி தோற்றது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3 விக்கெட்களும் ஸ்டோனிஸ் 2 விக்கெட்களும் எடுத்தனர். அதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ 4வது வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து வெற்றி பாதையில் நடந்து வருகிறது.

- Advertisement -

முன்னாதாக 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்போட்டி நடைபெற்ற ஜெய்ப்பூர் மைதானம் ஆரம்பம் முதலே பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருந்தது. அதனால் எந்த பேட்ஸ்மேனும் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்த நிலையில் கடைசி நேரத்தில் ஸ்டோனிஸ் – பூரான் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டு எக்ஸ்ட்ரா ரன்களை சேர்த்தது லக்னோவுக்கு பலமாக அமைந்தது.

இதையும் படிங்க: RR vs LSG : முதல் ஓவரிலேயே முரட்டு தடவல், ரசிகர்கள் சார்பாக நேரலையில் நேரடியாக ராகுலை விமர்சித்த பீட்டர்சன் – நடந்தது என்ன

ஆனால் 155 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு எதிராக லக்னோ துல்லியமாக பந்து வீசியதால் அதிரடி காட்ட முடியாமல் பட்லர் தடுமாறிய நிலையில் சாம்சன், ஹெட்மயர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தும் ராஜஸ்தான் 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

Advertisement