28 ரன்ஸ்.. லக்னோ மிரட்டல் வெற்றி.. சொந்த மண்ணில் செஃல்ப் எடுக்காத ஆர்சிபி.. 2 பரிதாப சாதனை

RCB vs LSG 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூருவில் 15வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய லக்னோவுக்கு 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கேஎல் ராகுல் 20 (14) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய குயிண்டன் டீ காக் 32 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை கிளன் மேக்ஸ்வெல் தவற விட்டார். அதை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய அவருடன் எதிர்புறம் கைகொடுக்க முயற்சித்த தேவதூத் படிக்கல் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 6 (11) ரன்களில் சிராஜ் வேகத்தில் நடையை கட்டினார்.

- Advertisement -

மிரட்டிய லக்னோ:
அப்போது வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குயிண்டன் டீ காக் அரை சதமடித்து 8 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (56) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் கடைசியில் 2 ஓவரில் பெங்களூரு பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய நிக்கோலஸ் பூரான் 1 பவுண்டரி 5 சிக்சருடன் 40* (21) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 20 ஓவரில் லக்னோ 181/5 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 182 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த விராட் கோலி 22 (16) ரன்களில் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் சுழலில் சிக்கினார். அடுத்த சில ஓவரில் கேப்டன் டு பிளேஸிஸ் 19 (13) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அதே ஓவரில் 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி கிளன் மேக்ஸ்வெலை டக் அவுட்டாக்கிய 21 வயதாகும் இளம் வீரர் மயங் யாதவ் அடுத்ததாக வந்த கேமரூன் கிரீனையும் 9 (9) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 58/4 என ஆரம்பத்திலேயே திணறிய பெங்களூருவை அடுத்ததாக ஜோடி சேர்ந்து காப்பாற்ற முயற்சித்த அனுஜ் ராவத் திணறலாக விளையாடி 11 (21) ரன்களில் நடையை கட்டினார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய ரஜட் படிதாரும் 29 (21) ரன்கள் மயங் யாதவ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் மஹிப்பால் லோம்ரர் 33 (13), தினேஷ் கார்த்திக் 4 (8), முகமது சிராஜ் 12 (8) ரன்கள் எடுத்தும் 19.4 ஓவரில் பெங்களூருவை 153 ரன்கள் ஆல் அவுட்டாக்கிய லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய லக்னோ சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: முதலில் இது இந்திய அணி கிடையாது.. அதை புரிஞ்சுக்கோங்க.. பாண்டியா விமர்சனங்கள் பற்றி ரவி சாஸ்திரி

அதனால் 3 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 3 போட்டிகளில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 9வது இடத்திற்கு சரிந்தது. அத்துடன் இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆல் அவுட்டான அணி மற்றும் தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் அணி ஆகிய 2 பரிதாப சாதனைகளை பெங்களூரு படைத்துள்ளது.

Advertisement