வீடியோ : சாதனையுடன் ஆர்சிபியை சரமாரியாக அடித்து நொறுக்கிய பூரன், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது எப்படி

Pooran RCB vs LSg
Advertisement

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10 தேதியன்று பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் உடன் இணைந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆரம்பத்திலேயே கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்து 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 4 சிக்சருடன் 61 (44) ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின் வந்த கிளன் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்த டு பிளேஸிஸ் சற்று அதிரடியாக விளையாடி ரவி பிஷ்னோய் வீசிய ஓவரில் 115 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு பெங்களூரு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். அவருடன் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்த கிளன் மேக்ஸ்வெல் 2வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 59 (29) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய டு பிளேஸிஸ் தலா 5 பவுண்டரி சிக்சருடன் 79* (46) ரன்கள் குவித்ததால் 20 ஓவரில் பெங்களூரு 212/2 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து 213 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் மேயர்ஸ் முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த சில ஓவர்களில் தீபக் ஹூடா 9 (10) க்ருனால் பாண்டியா 0 (2) என முக்கிய வீரர்களை வேன் பர்ணல் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதனால் 23/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய லக்னோவை அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் கொஞ்சமும் தாமதிக்காமல் 6 பவுண்டரி 5 சிக்சருடன் சரவெடியாக 65 (30) ரன்கள் குவித்து 3வது விக்கெட்டிக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தார். இவை அனைத்தையும் எதிர்ப்புறம் தடவலாக பேட்டிங் செய்து பார்த்துக் கொண்டிருந்த கேஎல் ராகுல் அடுத்த ஓவரிலேயே 18 (20) ரன்களில் நடையை கட்டியதால் 105/5 என சரிந்த லக்னோவின் வெற்றி கேள்விக்குறியானது.

ஆனால் அப்போது நான் இருக்கிறேன் என்ற வகையில் அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் முதல் பந்திலிருந்தே தெறிக்க விடும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 15 பந்துகளில் 50 ரன்களை விளாசி ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்த லக்னோ வீரர் என்ற சாதனையையும் இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை படைத்து பெங்களூரு ரசிகர்களை கதிகலங்க வைத்தார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த 2வது வீரர் என்ற சாதனையை யூசுப் பதான், சுனில் நரேன் (தலா 15) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

தொடர்ந்து அடித்து நொறுக்கிய அவருக்கு எதிர்ப்புறம் ஆயுஷ் படோனி கம்பெனி கொடுத்ததால் வெற்றியை நெருங்கிய லக்னோவுக்கு கடைசி 19 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் முகமது சிராஜ் வீசிய 17வது ஓவரின் கடைசி பந்தில் நிக்கோலஸ் பூரான் 4 பவுண்டரி 7 சிக்சருடன் 62 (19) ரன்களை 326.32 என்ற மிரட்டடாலான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் நிதானமாக செயல்பட்ட ஆயுஸ் படோனி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் முறையில் 4 சிக்ஸருடன் 30 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் ஜெயதேவ் உனட்கட் சிங்கிள் எடுக்க 2வது பந்தில் மார்க் வுட் 1 (2) ரன்னில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ரவி பிஷ்னோய் 3வது பந்தில் டபுள் எடுத்து 4வது பந்தில் சிங்கிள் எடுக்க 5வது பந்தில் உனட்கட் 9 (7) ரன்னில் அவுட்டானார்.

இதையும் படிங்க: அந்த வாய்ப்பு மட்டும் கெடைச்சா நான் கண்டிப்பா விளையாட தயார் – அஜின்க்யா ரஹானே வெளிப்படை

அதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது எதிர்புறம் ஹர்ஷல் படேல் மன்கட் செய்ய தவறிய நிலையில் ஆவேஷ் கான் பந்தை அடிக்க தவறி ஓடிய போது தினேஷ் கார்த்திக் ஸ்டம்ப்பை அடிக்க தவறியதால் 20 ஓவரில் 212/2 ரன்கள் எடுத்த லக்னோ வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பேட்டிங்கில் அடித்த ரன்களை பூரான், ஸ்டோனிஸ் ஆகியோரிடம் கொடுத்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

Advertisement