ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற்ற 16வது போட்டியில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 203-8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக துவக்க வீரர்கள் மிட்சேல் மார்ஷ் 60, ஐடன் மார்க்ரம் 53 மற்றும் ஆயுஷ் படோனி 30, டேவிஸ் மில்லர் 27 ரன்கள் எடுத்தனர். மும்பைக்கு அதிகபட்சமாக ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சாதனை படைத்தார். அடுத்ததாக விளையாடிய மும்பைக்கு துவக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் 5, ரியான் ரிக்கள்டன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அரிதான பரிதாபம்:
இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நமன் திர் – சூரியகுமார் யாதவ் நன்றாக விளையாடி மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் நமன் திர் 46 (24) ரன்களில் விக்கெட்டை இழந்ததும் திலக் வர்மா இம்பேக்ட் வீரராக களமிறங்கினர். ஆனால் அப்போது லக்னோ பவுலர்கள் மிகவும் துல்லியமாக பௌலிங் செய்ததால் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை.
அடுத்த சில ஓவரில் மறுபுறம் அரை சதம் அடித்த சூரியகுமார் யாதவ் 67 (43) ரன்களில் அவுட்டானது அழுத்தத்தை அதிகரித்தது. அதற்கடுத்ததாக வந்த பாண்டியா அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் 25 (23) ரன்களை 108.70 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து தடுமாறிய திலக் வர்மா அதிரடியாக விளையாட முடியாததால் ரிட்டையர்டு அவுட் முறையில் கேப்டன் பாண்டியாவின் ஆலோசனைக்கு இணங்க பெவிலியன் திரும்பினார்.
லக்னோ வெற்றி:
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி கடைசியில் ரிட்டையர்ட் அவுட்டான முதல் வீரர் என்ற அரிதான பரிதாபமான சாதனையை திலக் படைத்துள்ளார். இதற்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின் (2022), அதர்வா டைட் (2023), சாய் சுதர்சன் (2023) ஆகியோர் ரிட்டையர்டு அவுட்டாகியுள்ளனர். ஆனால் அவர்கள் முதன்மையான பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.
இதையும் படிங்க: 203 ரன்ஸ்.. பாண்டியா எந்த கேப்டனும் செய்யாத வரலாறு காணாத சாதனை.. தவற விட்ட மும்பையை அடித்த மார்ஷ்
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா 28* (16) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. அதனால் 20 ஓவரில் மும்பையை 191-5 ரன்களுக்கு கட்டுபடுத்திய லக்னோ தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அத்துடன் 5 முறை சாம்பியன் மும்பைக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் அந்த அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணிக்கு திக்வேஷ், சர்துள் தாக்கூர், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினார்கள்.



