ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி லக்னோவில் 16வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி லக்னோவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே தடுமாற்றமாக விளையாடிய மிட்சேல் மார்ஷ் 2வது ஓவரின் மூன்றாவது பந்தில் தீபக் சஹர் வேகத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.
உடனடியாக மும்பை அணியினர் விக்கெட் கேட்டும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்கவில்லை. மேலும் அது அவுட் இருக்காது என்று மும்பை அணியினர் ரிவ்யூ எடுக்கவில்லை. ஆனால் ரிப்ளையில் பார்த்த போது மார்ஷ் பேட்டில் பந்து பட்டதால் அது அவுட் என்று தெரிய வந்தது. அந்த வகையில் ஆரம்பத்திலேயே மும்பை விக்கெட்டை தவற விட்டதைப் பயன்படுத்திய மார்ஷ் அதிரடியாக விளையாட துவங்கினார்.
மார்ஷ் அசத்தல்:
ஐடன் மார்க்ரமுடன் சேர்ந்து தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்ஷ் 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை அடித்து 60 (31) ரன்கள் குவித்து விக்னேஷ் புதூர் சுழலில் அவுட்டானார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரானை 12 ரன்னில் காலி செய்த ஹர்திக் பாண்டியா அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட்டையும் 2 (6) ரன்னில் அவுட்டாக்கினார்.
அதற்கடுத்ததாக வந்த ஆயுஸ் படோனி அதிரடியாக விளையாட முயற்சித்து 30 (19) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய மார்க்கம் அரை சதத்தை அடித்த போது 53 (38) ரன்னில் பாண்டியா வேகத்தில் அவுட்டாக்கினார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லரும் 27 (14) ரன்னில் பாண்டிய வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
பாண்டியா சாதனை:
அதனால் 20 ஓவரில் லக்னோ 203-8 ரன்கள் எடுத்தனர். மும்பை அணிக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் வாயிலாக 18 வருட ஐபிஎல் தொடரின் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தோனி 2 டைம் மெசேஜ் பண்ணாரு.. கிரகம் நகர்வாதல் பரிகாரம் பண்ண சொன்னாரு.. 2022 சந்திப்பு பற்றி அக்சர் படேல்
2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே உட்பட எந்த ஜாம்பவான் கேப்டனும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை. அத்துடன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிக விக்கெட்டுகள் (தலா 30) எடுத்த கேப்டன் என்ற கும்ப்ளே சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் ஷேன் வார்னே 57 விக்கெட்டுகளுடன் உள்ளார்.



