ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் 64வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்து அசத்தியது. அந்த அணிக்கு துவக்க வீரர் மிட்சேல் மார்ஷ் குஜராத்தை அடித்து நொறுக்கி சதத்தை அடித்தார்.
மொத்தம் 10 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 117 (68) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் ஐடன் மார்க்ரம் 36, நிக்கோலஸ் பூரான் 56*, கேப்டன் ரிஷப் பண்ட் 16* ரன்களை அடுத்து கை கொடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய குஜராத்துக்கு 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த சாய் சுதர்சன் 21 (16) ரன்களில் அவுட்டானார்.
லக்னோ வெற்றி:
அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 35 (20) ரன்கள் விளாசி அவுட்டானார். மிடில் ஆர்டரில் நம்பிக்கை நாயகன் ஜோஸ் பட்லர் 33 (18), ரூதர்போர்ட் 38 (22) ரன்கள் விளாசிய போதிலும் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதே போல தமிழக வீரர் சாருக்கான் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 57 (29) ரன்கள் குவித்து போராடினார்.
ஆனால் எதிர்புறம் ராகுல் திவாடியா 2, அர்சத் கான் 1, ரசித் கான் 4* என மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க தவறினர். அதனால் 20 ஓவரில் 202/9 ரன்களை மட்டுமே எடுத்த குஜராத் 4வது தோல்வியை பதிவு செய்த போதிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் ஏற்கனவே வெளியேறிய லக்னோ 13 போட்டிகளில் 7வது ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
நண்பனுக்கு அர்ப்பணிப்பு:
அந்த அணிக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓ’ரோர்க்கே 3, ஆவேஷ் கான் 2, ஆயுஷ் படோனி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதே போல இளம் இந்திய வீரர் ஆகாஷ் சிங் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் விக்கெட்டை கிளீன் போல்ட்டாக்கி எடுத்தார். அப்போது பெவிலியனை நோக்கி கையில் எழுதிய அவர் அதை காற்றில் பறக்க விட்டு வித்தியாசமாக கொண்டாடினார்.
இதையும் படிங்க: 6, 4, 6, 4, 4.. 2008 அண்ணன் போல ரசித் கானையே நொறுக்கிய மார்ஷ் அரிதான சாதனை.. குஜராத்தை பந்தாடிய லக்னோ
லக்னோ அணியின் இளம் வீரர் திக்வேஷ் சிங் கடந்தப் போட்டியில் விக்கெட்டை எடுத்து ஆக்ரோசமாக கொண்டாடி அபிஷேக் சர்மாவுடன் சண்டையிட்டதால் இப்போட்டியில் விளையாட தடைப் பெற்றார். எனவே அவருடைய நண்பரான ஆகாஷ் சிங் விக்கெட்டை எடுத்த போது அதை திக்வேஷ்’க்கு அர்ப்பணிக்கும் வகையில் அப்படி கொண்டாடினார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.



