
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 21வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு குவிண்டன் டீ காக்’கை 6 ரன்களில் அவுட்டாக்கிய உமேஷ் யாதவ் அடுத்ததாக வந்த தேவதூத் படிக்கலை 7 ரன்களில் காலி செய்தார்.
அதனால் 18/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய லக்னோவுக்கு மறுபுறம் கேப்டன் கேஎல் ராகுல் நங்கூரமாக விளையாடினார். அவருடன் சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த ராகுல் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 33 (31) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார்.
ஸ்பெஷல் வெற்றி:
அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நன்றாக விளையாடிய ஸ்டாய்னிஸ் அரை சதமடித்து 58 (43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆயுஷ் பதோனி அதிரடியாக 20* (11) ரன்களும் நிக்கோலாஸ் பூரான் 32* (22) ரன்களும் எடுத்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் லக்னோ 163/5 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 164 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சாய் சுதர்சனுடன் 6 ஓவரில் 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் திணறலாக பேட்டிங் செய்த கேப்டன் சுப்மன் கில் 19 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ரவி பிஸ்னோயின் அபார கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அசத்தலாக விளையாடிய சாய் சுதர்சனை 31 (23) ரன்களில் அவுட்டாக்கிய க்ருனால் பாண்டியா அடுத்ததாக வந்த சரத்தை 2 ரன்களில் காலி செய்தார்.
அதனால் 61/4 என திணறிய குஜராத்துக்கு அடுத்ததாக வந்த தர்சன் நல்கண்டே 12, விஜய் சங்கர் 17, ரசித் கான் 0, ராகுல் திவாட்டியா 30 ரன்களில் லக்னோவின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார்கள். அடுத்து வந்த வீரர்களும் யாஷ் தாக்கூர் வேகத்தில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர். அதனால் 18.5 ஓவரிலேயே குஜராத்தை 130 ரன்களுக்கு சுருட்டிய லக்னோ 32 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: தல தோனியின் தனித்துவமான சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா.. 49 ரன்னில் புதிய சாதனை
அந்த அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தாக்கூர் 5, க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இந்த வெற்றியால் ஐபிஎல் தொடரில் 4 தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின் முதல் முறையாக குஜராத்தை தோற்கடித்த லக்னோ அவமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய குஜராத் 3வது தோல்வியை பதிவு செய்த்து.