கடையில் விற்கிற மாதிரி இருக்கு – தங்களுடைய அணியின் புதிய ஜெர்சியை கலாய்த்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்

Pak Shadab Khan
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தலைமையில் பங்கேற்ற இருதரப்பு தொடர்களில் பெரும்பாலும் வெற்றிகளை பதிவு செய்து வந்தது. இருப்பினும் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பை 2022 தொடரில் லீக் சுற்றில் பரம எதிரி இந்தியாவிடம் தோற்றாலும் சூப்பர் 4 சுற்றில் பதிலடி கொடுத்து பழி வாங்கிய பாகிஸ்தான் பைனலில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. குறிப்பாக டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கையை 58/5 என மடக்கிப் பிடித்தும் அதன்பின் ரன்களை வாரி 171 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோற்ற பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

SL vs PAK Babar Azam

அதிலும் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் ஆகியோர் இருந்தும் 171 ரன்களை துரத்த முடியாமல் துபாயில் தோற்ற அந்த அணி உலக கோப்பையை எங்கே வெல்லப் போகிறது என அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். அந்த நிலைமையில் உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து சேர்க்கப்பட்டுள்ளது பலத்தை சேர்த்துள்ளது.

- Advertisement -

புதிய ஜெர்ஸி:
முன்னதாக டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் தங்களது 15 பேர் கொண்ட அணிகளை வெளியிட்ட பெரும்பாலான நாடுகள் தங்களது அணி வீரர்கள் அணிந்து விளையாடும் பிரத்யேக புதிய ஜெர்சியையும் வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் வழக்கமான அடர்ந்த பச்சை நிறத்தை மையப்படுத்தி தங்களது புதிய ஜெர்ஸியை பாகிஸ்தான் வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இருப்பினும் அந்த ஜெர்ஸியின் முன்புறத்தில் வெளிர்மையான பச்சைக் கோடுகள் வரையப்பட்டுள்ளதும் புதுமையை காட்டுவதற்கு புதிய டிசைனை பயன்படுத்தாமல் பழைய பஞ்சாங்கத்தை போன்ற பழைய டிசைன் பயன்படுத்தப் பட்டுள்ளதும் அந்த ஜெர்ஸியை சுமாரானதாக மாற்றியுள்ளது.

- Advertisement -

அதை பார்க்கும் ரசிகர்கள் பழைய ஜெர்ஸியை விட இது சுமாராக இருப்பதாக கூறுதை பார்க்க முடிகிறது. அதை விட அடர்ந்த பச்சை நிறத்தில் வெளிர்மையான பச்சை கோடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஜெர்ஸி தர்பூசணி பழத்தைப் பார்த்து உத்வேகமடைந்து அப்படியே காப்பி அடித்ததை போல் உள்ளதாக புதிய ஜெர்ஸி வெளியிட்ட நாளன்றே பாகிஸ்தான் வாரியத்தை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்ததை பார்க்க முடிந்தது.

பழக்கடை ஜெர்ஸி:
இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பாகிஸ்தான ஜெர்சி பிரபல மொபைல் விளையாட்டான ஃப்ரூட் நிஞ்சாவில் வரும் வண்ணங்களை பார்ப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் இந்த புதிய டிசைன் தர்பூசணி பழத்தைப் போல் இருப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுடைய புதிய டி20 உலக கோப்பை ஜெர்ஸி பார்ப்பதற்கு தர்பூசணி பழத்தைப் போல் உள்ளது. இதை பார்க்கும் போது அவர்கள் ஃப்ரூட் நிஞ்சா கேம் விளையாடிய போது உத்வேகமடைந்து இந்த ஜெர்சியை உருவாக்கியதாக தெரிகிறது”

- Advertisement -

Danish-Kaneria

“அந்த ஜெர்சியில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள நிறத்தை விட சரியான அடர்ந்த கருமை நிறம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஜெர்சியை பார்க்கும் போது நீங்கள் பழங்களை விற்கும் கடையில் நிற்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது” என்று கூறினார். பொதுவாக ரசிகர்கள் கலாய்ப்பது சாதாரணமானது என்ற நிலைமையில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரரே இப்படி கலாய்க்கும் அளவுக்கு பாகிஸ்தானின் ஜெர்ஸி இருப்பதாக இதைப் பார்க்கும் ரசிகர்கள் கலகலக்கிறார்கள்.

இதையும் படிங்க : தோனிக்கு நிகராக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு விருந்து படைத்த சஞ்சு சாம்சன் – வைரல் வீடியோவின் விவரம் இதோ

இருப்பினும் தற்போது 17 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்கும் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்த ஜெர்சியை முதல் முறையாக அணிந்து விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் வென்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. மேலும் இதே ஜெர்ஸியுடன் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பரம எதிரியான இந்தியாவை மீண்டும் தோற்கடிக்கும் முனைப்புடன் அந்த அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement