தோனிக்கு நிகராக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு விருந்து படைத்த சஞ்சு சாம்சன் – வைரல் வீடியோவின் விவரம் இதோ

Sanju Samson Fans
- Advertisement -

ஆசிய கோப்பை தோல்விக்கு பின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை மற்றும் தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது நிறைய ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் கடந்த 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய அவருக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு தொடர்ச்சியான வாய்ப்புகளை மறுத்து வருகிறது. இருப்பினும் மனம் தளராமல் கடினமாக உழைத்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக விளையாடி இந்த வருடம் இந்தியாவுக்காக விளையாட கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு முதல் முறையாக அரை சதமும் ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தினார்.

ஆனாலும் டி20 உலக கோப்பைக்கான அணியின் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்காமல் மீண்டும் புறக்கணிக்கப்பட்டதால் ரசிகர்களின் கோபத்தை தணிப்பதற்காக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும் ரசிகர்கள் திருப்தியடையாத நிலையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 21ஆம் தேதியான நேற்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் தன்னை நோக்கி வந்ததை பயன்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக  அறிவித்தார்.

- Advertisement -

சுருண்ட நியூஸிலாந்து:
அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி இந்திய பவுலர்களின் திறமையான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 40.2 ஓவரில் வெறும் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொதுவாகவே சமீப காலங்களில் பந்து வீச்சுக்கு கைகொடுத்து வரும் சவாலான சென்னை மைதானத்தில் தடுமாறிய நியூசிலாந்து அணிக்கு அதிக பட்சமாக மைக்கேல் ரிப்பான் 61 (104) ரன்களும் ஜோ வால்க்கர் 36 (49) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

அதை தொடர்ந்து 168 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியா ஏ அணிக்கு தொடக்க வீரர் பிரிதிவி ஷா 17 (24) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (54) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 31 (40) ரன்களுக்கு ஆட்டமிழந்த போது கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். பிசிசிஐ தொடர்ந்து புறக்கணித்து வரும் அவருக்கு சமீப காலங்களில் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகி ஒவ்வொரு முறை புறக்கணிக்கப்படும் போதும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

தோனிக்கு நிகராக:
அந்த வரிசையில் தமிழகத்திலும் அவரை விரும்பும் ஏராளமான ரசிகர்கள் இந்தியா ஏ அணி பங்கேற்கும் போட்டியாக இருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்துக்கு நேரடியாகச் சென்று அவரது ஆட்டத்தை பார்த்து ஆதரவு கொடுத்தனர். அந்த நிலையில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ஒன்று சேர்ந்த அத்தனை ரசிகர்களும் விண்ணதிர முழங்கி மிகப் பெரிய ஆரவாரம் செய்து வரவேற்பு தெரிவித்தனர்.

அதிலும் தமிழகத்தை மற்றொரு வீடாக கொண்டு தல என்றழைக்கப்படும் முன்னாள் இந்திய கேப்டன் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினால் கொடுக்கும் ஆதரவுக்கு நிகராக சென்னை ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு கொடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அப்படி தன் மீது பாசம் வைத்து வரவேற்பு கொடுத்த ரசிகர்களை ஏமாற்றாத வகையில் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் பொறுமையை காட்டினாலும் இறுதியில் அதிரடியாக 1 பவுண்டரி 3 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு 29* (32) ரன்கள் குவித்து பினிஷிங் செய்து விருந்து படைத்தார்.

இதையும் படிங்க : PAK vs ENG : மாஸ் காட்டிய பாபர் – ரிஸ்வான் ஜோடி, டி20 கிரிக்கெட்டில் 3 பிரம்மாண்ட உலகசாதனைகள்

அவருடன் ரஜத் படிடார் 7 பவுண்டரியுடன் 45* (41) ரன்கள் எடுத்ததால் 31.5 ஓவரிலேயே 170/3 ரன்கள் எடுத்த இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மேலும் கேப்டனாக சஞ்சு சாம்சன் தலைமையில் இந்திய அணி வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இதை தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி வரும் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement