PAK vs ENG : மாஸ் காட்டிய பாபர் – ரிஸ்வான் ஜோடி, டி20 கிரிக்கெட்டில் 3 பிரம்மாண்ட உலகசாதனைகள்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு 17 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் செப்டம்பர் 20ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் 2வது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று கராச்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199/5 ரன்கள் சேர்த்து அசத்தியது.

அந்த அணிக்கு 3 வருடங்கள் கழித்து திரும்பியுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ் 26 (21) பில் சால்ட் 30 (27) என தொடக்க வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் மிடில் ஆர்டரில் பென் டன்க்கட் அதிரடியாக 7 பவுண்டரியுடன் 43 (22) ரன்களும் ஹரி ப்ரூக் 31 (19) ரன்களும் எடுத்தனர். அவர்களை விட கேப்டனாக களமிறங்கிய மொய்ன் அலி 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 55* (23) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரீஸ் ரவூப் மற்றும் சன்வாஸ் டஹானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மாஸ் சேசிங்:
அதை தொடர்ந்து 200 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு சமீபத்திய ஆசிய கோப்பையில் பார்மை இழந்து நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் இடத்தையும் இழந்த நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருந்தும் சமீபத்திய ஆசிய கோப்பையில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதால் விமர்சனங்களை சந்தித்த முகமது ரிஸ்வான் மற்றொரு புறம் அதிரடி காட்டினார்.

முதல் போட்டியில் தோல்வியை பரிசளித்த அதே இங்கிலாந்து பவுலர்களை ஆரம்பம் முதலே செட்டிலாக விடாமல் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களைச் சேர்த்த இவர்கள் அரைசதம் கடந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் வெற்றியை உறுதிசெய்த இவர்களைப் பிரிக்க இங்கிலாந்து போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 19.3 ஓவரில் 203/0 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

- Advertisement -

3 உலக சாதனைகள்:
இதில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக மட்டும் அடிக்கக் கூடியவர் என்று கிண்டலுக்கு உள்ளான கேப்டன் பாபர் அசாம் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக அற்புதமாக பேட்டிங் செய்து சதமடித்து 11 பவுண்டரி 5 சிக்சருடன் 110* (66) ரன்களை 166.66 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசி வெற்றிபெற வைத்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய முஹம்மது ரிஸ்வான் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 88* (51) ரன்களை 172.55 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். சமீப காலங்களில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார்கள் என கடுமையான விமர்சனங்களை சந்தித்த இவர்கள் அதை நேற்றைய போட்டியில் அடித்து நொறுக்கி பாராட்டுகளைப் பெற்றனர்.

1. அதைவிட இப்போட்டியில் 200 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்த பாகிஸ்தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை ஒரு விக்கெட் கூட விடாமல் வெற்றிகரமாக துரத்திய முதல் அணி என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்த அணியும் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை சேசிங் செய்ததே கிடையாது.

- Advertisement -

2. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓபனிங் ஜோடி என்ற தங்களது சொந்த சாதனையை பாபர் – ரிஸ்வான் ஜோடி முறியடித்தனர். அந்தப் பட்டியல்:
1. முஹம்மது ரிஸ்வான் – பாபர் அசாம் : 203*, இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
2. முஹம்மது ரிஸ்வான் – பாபர் அசாம் : 197, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2021
3. மார்ட்டின் கப்தில் – கேன் வில்லியம்சன் : 171*, பாகிஸ்தானுக்கு எதிராக, 2017

3. அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடி என்ற இந்தியாவின் ஷிகர் தவான் – ரோகித் சர்மா ஆகியோரது சாதனையும் இவர்கள் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளனர். அந்தப் பட்டியல்:
1. முஹம்மது ரிஸ்வான் – பாபர் அசாம் : 1929* ரன்கள்
2. ஷிகர் தவான் – ரோகித் சர்மா : 1743 ரன்கள்

இதையும் படிங்க : IND vs AUS : அவரே வந்தாலும் இந்தியாவை காப்பாற்றுவது கஷ்டம் தான் – காரணத்துடன் எச்சரிக்கும் முன்னாள் வீரர்

இப்படி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் 1 – 1* (7) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் 3வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று கராச்சியில் நடைபெறுகிறது.

Advertisement