ஆசிய கோப்பை வரலாற்றின் ஃபைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்ற அனைத்து வீரர்களின் பட்டியல்

- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 2016க்குப்பின் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்ல 6 அணிகள் மோத உள்ளன. கடந்த 1984 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று உள்ள 14 தொடர்களில் 7 கோப்பைகளை வென்று இந்தியா வெற்றிகரமாக அணியாக திகழ்கிறது. அதற்கடுத்தபடியாக இலங்கை 5 கோப்பைகளுடனும் பாகிஸ்தான் 2 கோப்பைகளுடனும் உள்ளன.

ஆசிய கண்டத்தில் நடைபெறும் இந்த தொடரின் கால சூழ்நிலைகளையும் எதிரணியில் இருக்கும் வீரர்களையும் பற்றி ஒவ்வொரு அணியும் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் இந்த கோப்பையை வெல்வதற்கு ஒவ்வொரு முறையும் போட்டி பலமாக இருந்து வருகிறது. அப்படி சவாலான ஆசிய கோப்பையில் சாதாரண லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டியில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தை சமாளித்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கு உலகத்தரம் வாய்ந்த வீரர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் ஆசிய கோப்பை வரலாற்றில் அழுத்தம் நிறைந்த இறுதிப் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஜாவேத் மியாண்டட்: 1984இல் நடைபெற்ற முதல் ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டி இல்லாமல் 3 போட்டிகளில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்ட நிலையில் 1986இல் இலங்கையில் நடைபெற்ற 2வது ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்து இலங்கை முதல் கோப்பையை வென்றது.

கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 192 ரன்களை துரத்திய இலங்கை வெற்றி பெற்றாலும் 67 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் ஆறுதலாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

2. நவ்ஜோட் சித்து: 1988இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை தோற்கடித்த இந்தியா 2-வது கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 177 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 76 (87) ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றிய இவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

3. முகமத் அசாருதீன்: 1990/91இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை தோற்கடித்த இந்தியா 3வது கோப்பையை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த போட்டியில் இலங்கை நிர்ணயித்த 205 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 75* (95) ரன்கள் எடுத்தாலும் 54* (39) ரன்களை அந்த காலத்திலேயே 138.46 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அசாருதீன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

4. முகமத் அசாருதீன்: 1995இல் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் கேப்டனாக இந்தியாவை வழி நடத்திய முகமது அசாருதீன் இலங்கையை தோற்கடித்து 4-வது கோப்பையை வென்று கொடுத்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 90* (121) ரன்களைக் குவித்து வெற்றி பெற வைத்த அவர் ஆட்டநாயகன் விருதையும் சேர்த்து வென்றார். மேலும் அடுத்தடுத்த ஆசிய கோப்பை பைனல்களில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரே வீரராகவும் சாதனை படைத்தார்.

5. மர்வான் அட்டப்பட்டு: 1997இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை 2வது கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 240 ரன்கள் துரத்தும்போது 84 (101) ரன்களை குவித்த இவர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

- Advertisement -

6. மொய்ன் கான்: 2000ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் முதல் கோப்பையை வென்று அசத்தியது.

டாக்காவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானுக்கு சயீத் அன்வர் 82, இன்சமாம் 72* (66) ரன்கள் குவித்திருந்தாலும் 56* (31) ரன்களை அந்தக் காலத்திலேயே 180.64 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு பினிஷிங் கொடுத்த இவர் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியதால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

7. மர்வான் அட்டப்பட்டு: சொந்த மண்ணில் நடைபெற்ற 2004 ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை 3வது கோப்பையை வென்றது. கொழும்புவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தங்களது அணிக்கு 65 (87) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இவர் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

8. அஜந்தா மெண்டிஸ்: 2008இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவை மீண்டும் தோற்கடித்த இலங்கை 4வது கோப்பையை வென்றது. கராச்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 273 ரன்களை துரத்திய இந்தியாவை தனது மாயாஜால சுழலால் 6 விக்கெட்டுகளை எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

9. தினேஷ் கார்த்திக்: 2010இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா 5-வது கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 268/6 ரன்களைக் குவிக்க 66 (84) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

10. ஷாஹித் அப்ரிடி: 2012இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2வது கோப்பை வென்றது. மிர்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி நிர்ணயித்த முக்கியமான 32 (22) ரன்களையும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

11. லசித் மலிங்கா: 2014இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை 5வது கோப்பையை வென்றது. மிர்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 261 ரன்களை துரத்திய இலங்கைக்கு லஹிரு திரிமண்ணே 101 ரன்கள் குவித்தாலும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய லசித் மலிங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

12. ஷிகர் தவான்: 2016இல் முதல் முறையாக 20 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 6வது கோப்பையை வென்றது. மிர்பூரில் நடைபெற்ற அந்த இறுதி போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 121 ரன்கள் இலக்கை 60 (44) ரன்கள் எடுத்து எளிதாக எட்ட உதவிய இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

13. லிட்டன் தாஸ்: கடைசியாக 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 7வது கோப்பையை வென்றது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா வென்றாலும் 222 ரன்கள் இலக்கை வங்கதேசம் நிர்ணயிக்க சதமடித்து 121 ரன்கள் குவித்து தனி ஒருவனாக போராடிய இவர் ஆறுதலாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement