
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இப்போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. குறிப்பாக 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த தெம்புடன் இந்தியா களமிறங்குகிறது.
மறுபுறம் ஐசிசி ஃபைனல்களில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டுள்ள ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வென்று சமீப காலத்தில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அனைவருமே சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானாலும் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சொல்லப்போனால் 24 போட்டிகளில் 8 சதங்கள் உட்பட 1979 ரன்களை விளாசி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்ததால் கடந்த ஃபைனலில் சுமாராகவே செயல்பட்டார்.
சாதனை பட்டியல்:
ஆனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் சதங்களை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் கடைசியாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்தார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் இப்போட்டியில் படைப்பதற்கு வாய்ப்புள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:
1. மிகவும் அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான செமி ஃபைனல் மற்றும் ஃபைனல்களை சேர்த்து இதுவரை 16 இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி 620 ரன்களை 51.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
எனவே இப்போட்டியில் இன்னும் 38 ரன்களை எடுக்கும் பட்சத்தில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சச்சின் (657 ரன்கள் – 14 இன்னிங்ஸ்) சாதனையும் 112 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் உலக அளவில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் (731 ரன்கள் – 18 இன்னிங்ஸ்) சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார்.
2. இப்போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னரான நேதன் லயனை சிறப்பாக எதிர்கொள்வது அவசியமாகும். அந்த வகையில் இப்போட்டியில் அவருக்கு எதிராக 60 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புஜாராவின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார். இதுவரை லயனுக்கு எதிராக புஜாரா 570 ரன்கள் எடுத்து அந்த சாதனை படைத்துள்ள நிலையில் விராட் கோலி 511 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
3. இப்போட்டியில் 71 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் சவாலான இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ராகுல் டிராவிட் சாதனையை விராட் கோலி உடைப்பார். தற்போது 2574 ரன்களுடன் விராட் கோலி 3வது இடத்திலும் சச்சின் 2626 ரன்களுடன் 2வது இடத்திலும் ராகுல் டிராவிட் 2645 ரன்களுடன் முதலிடத்திலும் உள்ளனர்.
4. இப்போட்டியில் களமிறங்கும் விராட் கோலி அதிக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் விளையாடிய 3வது வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். தற்போது தலா 15 போட்டிகளுடன் அந்த சாதனையை சச்சின் மற்றும் தோனியுடன் பகிர்ந்து கொண்டுள்ள இவர் 16வது முறையாக இப்போட்டியில் களமிறங்கி அந்த சாதனை படைக்க உள்ளார். முதலிரண்டு இடங்களில் ரிக்கி பாண்டிங் (18) மற்றும் யுவராஜ் சிங் (17) ஆகியோர் உள்ளனர்.
5. இப்போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில் ஐசிசி உலகக் கோப்பையின் ஃபைனலில் சதமடிக்கும் 2வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன் கடந்த 2000 சாம்பியன்ஸ் டிராபியில் கங்குலி முதலும் கடைசியாக சதமடித்திருந்தார்.
இதையும் படிங்க:ஐ.பி.எல் தொடரால் கிடைக்கும் பணத்தை விட எனக்கு இதுதான் பெருசு. அதான் ஐ.பி.எல் ஆடுறதில்ல – மிட்சல் ஸ்டார்க் ஓபன்டாக்
6. இதுவரை 108 போட்டிகளில் 8416 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி இப்போட்டியில் இன்னும் 125 ரன்களை எடுத்தால் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தன்னுடைய ரோல் மாடல் விவ் ரிச்சர்ட்ஸை (8540) மிஞ்சி சாதனை படைப்பார். அதே போல் 171 ரன்களை எடுத்தால் விரேந்தர் சேவாக்கை (8586) முந்துவதற்கு வாய்ப்புள்ளது.