ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்

Afridi
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதியான இன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியது. இது போன்ற ஐசிசி தொடர்களில் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்வதற்கு ஒரு அணியில் 11 வீரர்கள் களமிறங்கினாலும் அந்த சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் வீரர்களின் ஆட்டமே வெற்றியாளரை தீர்மானிக்கும். அது போன்ற வீரர்கள் மற்றும் பல அணிகள் பங்கேற்கும் இது போன்ற உலக கோப்பை தொடர்களில் ஆரம்பம் முதல் இறுதிவரை கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளில் முக்கிய பங்காற்றுவார்கள். அத்துடன் உலகில் பெரும்பாலான வீரர்கள் சாதாரண இருதரப்பு தொடர்களில் அசத்துவார்கள்.

ஆனால் சிலரால் மட்டுமே அழுத்தமான உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் எதிரணி கொடுக்கும் சவால்களை தவிடுபொடியாக்கி நாயகர்களாக முன்னின்று தங்களது அணியை வெற்றிபெற வைப்பார்கள். அவர்களது ஆட்டத்திற்கு பரிசாக தொடரின் முடிவில் தொடர் நாயகன் விருதை வழங்கி கௌரவிப்பது வழக்கமாகும்.

- Advertisement -

தொடர் நாயகர்கள்:
பெரும்பாலும் கோப்பையை வெல்லும் அணியின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது சில சமயங்களில் தோற்றாலும் தனி ஒருவனாக போராடிய வீரர்களுக்கு சமர்ப்பித்த வரலாறு உள்ளது. அந்த வகையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியலை பார்ப்போம்:

1. ஷாஹித் அஃப்ரிடி: 2007இல் தென்னாபிரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றை கடந்து வந்த பாகிஸ்தானின் வெற்றியை மாபெரும் இறுதி போட்டியில் கையில் வைத்திருந்தும் கடைசி ஓவரில் போராடிய மிஸ்பா-உல்-ஹக் தேவையற்ற ஷாட் அடித்து கோப்பையை இந்தியாவுக்கு தாரை வார்த்தார். இருப்பினும் அந்த தொடரில் 91 ரன்களையும் 12 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய இவருக்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

- Advertisement -

2. திலகரத்னே தில்சான்: 2009இல் இங்கிலாந்தில் நடைபெற்ற 2வது டி20 உலக கோப்பையில் மீண்டும் பழைய தவறை செய்யாத பாகிஸ்தான் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஆனால் அத்தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய இலங்கை இறுதிப் போட்டியில் தோற்ற நிலையில் அதிகபட்சமாக 7 போட்டிகளில் 317 ரன்களை 52.83 என்ற அபாரமான சராசரியிலும் 144.74 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் எடுத்த இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

3. கெவின் பீட்டர்சன்: 2010இல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 3வது உலகக் கோப்பையில் தங்களைப் போலவே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு வந்த பரம எதிரியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இங்கிலாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அந்த தொடரில் 248 ரன்களை 137.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 62.00 என்ற சிறப்பான சராசரியிலும் குவித்து வெற்றிக்கு பங்காற்றிய இவர் கோப்பையுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

4. ஷேன் வாட்சன்: வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான இவர் 2012இல் இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 249 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 49.80 என்ற சராசரியிலும் குவித்தார்.

அத்துடன் 11 விக்கெட்டுகளை 6.83 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்தும் அவரது போராட்டம் வீணாகும் வகையில் அரை இறுதியில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற ஆஸ்திரேலியா வெளியேறியது. இருப்பினும் அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

5. விராட் கோலி: 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சொல்லி அடித்த கில்லியாக செயல்பட்ட இவர் 6 போட்டிகளில் 319 ரன்களை 106.33 என்ற அற்புதமான சராசரியில் குவித்து வரலாற்றில் ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். குறிப்பாக பைனலில் தனி ஒருவனாக 77 ரன்கள் எடுத்தும் இலங்கையிடம் இந்தியா தோற்ற போதிலும் அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

6. விராட் கோலி: 2016இல் உச்சகட்ட பார்மில் இருந்த இவர் சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையில் 5 போட்டிகளில் 273 ரன்களை 136.50 என்ற அற்புதமான சராசரியிலும் 146.77 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து வெற்றிக்கு போராடினார்.

ஆனாலும் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸிடம் இந்தியா தோற்ற நிலையில் இவரது ஆட்டத்துக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன் வாயிலாக டி20 உலக கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த தொடர்களில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரராக இவர் சாதனை படைத்தார்.

7. டேவிட் வார்னர்: கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் 7 போட்டிகளில் 289 ரன்களை 146.70 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 48.16 என்ற சராசரியில் குவித்த இவர் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement