ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் சதம் விளாசிய அனைத்து 9 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

- Advertisement -

உலக டி20 கிரிக்கெட் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. பொதுவாகவே கிரிக்கெட்டில் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் சதமடித்து தனது நாட்டுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனபதே பேட்ஸ்மேன்களின் லட்சியமாக இருக்கும். இருப்பினும் அதற்கு சவாலாக உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் வருவார்கள் என்பதால் பெரும்பாலான போட்டிகளில் நினைத்தவாறு பேட்ஸ்மேன்கள் சதமடிப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக வெறும் 20 ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில் சதமடிப்பது மிகவும் கடினமாகும்.

ஏனெனில் இந்த வகையான கிரிக்கெட்டில் மட்டுமே 1 ரன் கூட வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் 30, 50 என ரன்கள் எதுவாக இருந்தாலும் அதை அதிரடியாக ரன்களை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலாகவும் சதமடிப்பதை 2வது எண்ணமாகவும் வைத்து பேட்ஸ்மென்கள் விளையாடுவார்கள். அப்படி சாதாரண டி20 போட்டியிலேயே அவ்வளவு சவால்கள் காத்திருக்கும் நிலையில் உலக கோப்பையில் சதமடிப்பது மிகப்பெரிய சவாலாகும். அந்த வகையில் உலகக் கோப்பை போட்டிகளில் நீண்ட நேரம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் நின்று சவால்களை தவிடுபொடியாக்கி சதமடித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. கிறிஸ் கெயில்: கடந்த 2007ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க் நகரில் துவங்கிய டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் பட்டையை கிளப்பிய இவர் 7 பவுண்டரி 10 மெகா சிக்சர்களை பறக்க விட்டு 117 (57) ரன்களை 205.26 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

அதன் வாயிலாக உலக கோப்பையில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்தார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை கிப்ஸ் 90*, கெம்ப் 46* ஆகியோரது அதிரடியால் தென் ஆப்பிரிக்கா எளிதாக சேசிங் செய்து வென்றது.

- Advertisement -

2. சுரேஷ் ரெய்னா: கடந்த 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் கிராஸ் ஐஸ்லட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இவர் 9 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 101 (60) ரன்கள் விளாசி இந்தியா 186/5 ரன்கள் எடுக்க உதவினார்.

இறுதியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் டி20 கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் சதமடித்த முதல் இந்தியராக வரலாற்றுச் சாதனை படைத்தார்.

- Advertisement -

3. மகிளா ஜெயவர்தனே: 2010 டி20 உலக கோப்பையில் ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே பவுலர்களை ஓப்பனிங்கில் களமிறங்கி பந்தாடிய இவர் 10 பவுண்டரி 4 சிக்சர்கள் 100 (64) ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் 173/7 ரன்கள் குவித்த இலங்கை பின்னர் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

4. பிரண்டன் மெக்கல்லம்: பொதுவாகவே முரட்டுத்தனமாக பேட்டிங் செய்யக்கூடிய இவர் இலங்கையில் நடைபெற்ற 2012 உலக கோப்பையில் பல்லகேலே நகரில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச பவுலர்களை பிரித்து மேய்ந்து 11 பவுண்டரி 7 சிக்சருடன் 123 (58) ரன்களை 212.06 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 191/3 ரன்களை எடுத்த நியூசிலாந்து பின்னர் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய நாளில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மெக்கல்லம் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்தார்.

55.அலெஸ் ஹேல்ஸ்: 2014 உலக கோப்பையில் சிட்டகாங் நகரில் நடந்த போட்டியில் இலங்கை நிர்ணயித்த 190 ரன்களை துரத்துகையில் மிரட்டிய இவர் 11 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 116* (64) ரன்களை விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.

6. அஹமத் செசாத்: 2014 டி20 உலக கோப்பையில் மிர்பூரில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் பந்தாடிய இவர் 10 பவுண்டரி 5 சிக்சருடன் 111* (62) ரன்களை விளாசி பாகிஸ்தானை 190/5 ரன்கள் எடுக்க வைத்து பின்னர் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

7. கிறிஸ் கெயில்: 2016இல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது சூறாவளியாக சுழன்றடித்த இவர் 5 பவுண்டரி 11 சிக்சருடன் 100* (48) ரன்கள் விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தார். அதிலும் 47 பந்துகளில் சதமடித்த அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேனாகவும் 2 சதங்களை விளாசிய ஒரே வீரராகவும் உலக சாதனை படைத்தார்.

8. தமீம் இக்பால்: 2016 உலக கோப்பையில் தரம்சாலாவில் கத்துக்குட்டி ஓமனை புரட்டி எடுத்த இவர் 10 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 103* (63) ரன்கள் விளாசினார். அதனால் 180/2 ரன்கள் எடுத்த வங்கதேசம் பின்னர் 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

9. ஜோஸ் பட்லர்: கடந்த 2021 உலகக் கோப்பையில் சார்ஜாவில் இலங்கையை வெளுத்து வாங்கிய இவர் 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் சதமடித்து 101* (67) ரன்கள் விளாசினார். அதனால் 163/4 ரன்கள் எடுத்த இங்கிலாந்து பின்னர் 26 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

Advertisement