ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே தனது 52வது வயதில் திடீரென மாரடைப்பால் நேற்று காலமானார். ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் அவர் தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இயற்கை எய்தினார். அவரின் இந்த இறப்பு ஆஸ்திரேலிய மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிகெட் உலகிற்கும் ஒரு மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

கடந்த 1992ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுழல்பந்து வீச்சில் பல புதிய பரிணாமங்களை கொண்டு வந்தார். ஒரு லெக் ஸ்பின்னராக அபாரமாக பந்துவீச தொடங்கிய அவர் வீசும் பந்துகளை எதிர்கொள்வதற்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் மிக மிக அதிகமாக யோசிப்பார்கள் என்றே கூறலாம். ஏனெனில் அவர் வீசும் பெரும்பாலான பந்துகள் தரையில் பிட்ச் ஆன பின்பு பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத வண்ணம் தாறுமாறாக திரும்பி திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பில் பட்டு போல்டாக மாறி விக்கெட்டை கொடுத்து விடும்.
கிங் ஆப் ஸ்பின்:
தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவுக்காக ஏகப்பட்ட வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். இலங்கையைச் சேர்ந்த ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்து இருக்கலாம்.

ஆனால் அவர் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சுக்கு அதிக கை கொடுக்கக்கூடிய இலங்கை போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த மண்ணில் தான் அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனையை படைத்துள்ளார். ஆனால் ஷேன் வார்னே பிறந்து வளர்ந்த ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் அளிக்குமே தவிர சுழல் பந்து வீச்சுக்கு அந்த அளவுக்கு கை கொடுக்காது.
ஆனால் அப்படிப்பட்ட சுழல் பந்து வீச்சுக்கு கைகொடுக்காத மைதானங்களில் கூட தனது அபார திறமையால் ஏராளமான விக்கெட்டுகளை அள்ளிய காரணத்தினாலேயே அவரை “கிங் ஆப் ஸ்பின்” என கிரிக்கெட் வல்லுநர்களும், ஜாம்பவான்களும், ரசிகர்களும் மனதார அழைத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட அவர் தற்போது திடீரென நம்மை இட்டுச் சென்றுள்ளது கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றே கூற வேண்டும். அவரை இழந்ததற்காக சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா போன்ற பல்வேறு ஜாம்பவான்களும் ரசிகர்களும் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகிறார்கள்.

சாதனைகளின் பட்டியல்:
கிரிக்கெட்டில் ஷேன் வார்னே காரணமாகத்தான் இன்று பல லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இன்னும் சொல்ல வேண்டுமெனில் லெக் ஸ்பின் பவுலிங் என்பது ஒரு கலையானால் ஷேன் வார்னே அதன் மகத்தான கலைஞன் ஆவார். கிரிக்கெட்டில் அவர் எந்த அளவுக்கு தரமானவர் என்பதைப்பற்றி வெறும் வார்த்தைகளாலும் சாதனைகளாலும் சொல்லமுடியாது என்றாலும் இந்த தருணத்தில் அவர் செய்துள்ள சாதனைகளை பற்றி பார்ப்போம்.
1. 708 விக்கெட்கள்: ஏற்கனவே கூறியது போல முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்திருக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 600 மற்றும் 700 என யாராலும் தொட முடியாத இருந்த மைல்கல்லை முதன் முதலாக ஷேன் வார்னே தான் எட்டி பிடித்து முதன்முதலில் சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக 708 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த லெக் ஸ்பின்னர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

2. ஆயிரத்தில் ஒருவன்: 708 டெஸ்ட் 293 ஒருநாள் விக்கெட்கள் என மொத்தம் 1001 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 2வது பவுலர் மற்றும் 1000 விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
3. காலண்டர் கிங்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையையும் ஷேன் வார்னே படைத்துள்ளார். அவர் கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த 15 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தி என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

4. ஆஷஸ் கிங்: கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மகத்தான சாதனையையும் ஷேன் வார்னே தன் வசம் வைத்துள்ளார். அவர் 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகளை எடுத்து இந்த அபார சாதனை படைத்துள்ளார்.
5. சதம் அடிக்காத நாயகன்: ஒரு மகத்தான பவுலராக கருதப்படும் அவர் பேட்டிங்கிலும் 3154 ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சதம் அடிக்காமல் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 99 ரன்கள் அடித்து சதத்தை நெருங்கிய அவரை டேனியல் வெட்டோரி அவுட் செய்ததால் இந்த பொன்னான சாதனை அவரின் பெயருடன் சேர்ந்தது. இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சதம் அடிக்காமல் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

6. முதல் ஐபிஎல் கேப்டன்: இன்று உலகின் மிகப்பெரிய தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு நடந்த முதல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்த ஷேன் வார்னே அந்த முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று காட்டினார். அப்போது 37 வயது நிரம்பியிருந்த அவர் நட்சத்திர வீரர்கள் இல்லாத ராஜஸ்தான் அணிக்கு அபாரமாக கேப்டன்ஷிப் செய்து இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின் இன்றுவரை ராஜஸ்தான் அணியால் மீண்டும் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதிலிருந்தே அவரின் கேப்டன்ஷிப் எவ்வளவு பிரமாதமாக இருந்திருக்கும் என நினைத்து பாருங்கள்.
கௌரவங்கள்:
1. 90 களில் அபாரமாக செயல்பட்ட இவர் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தை வீசி (பால் ஆப் தி சென்ஞ்சூரி) சரித்திர சாதனை படைத்துள்ளார்.

2. மேலும் 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ஷேன் வார்னே புகழ் பெற்ற “விஸ்டன்” பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3. கிரிக்கெட்டில் இவர் ஆற்றிய பங்கிற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் இவருக்கு மிக உயரிய “ஐசிசி ஹால் ஆப் பேம்” என்ற கௌரவ பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ஷேன் வார்ன் திடீர் மாரடைப்பிற்கு பின்னால் இந்த பிரச்சனை தான் காரணமா? – அவரே வெளியிட்ட பதிவு
4. ஷேன் வார்னே – முத்தையா முரளிதரன் ஆகியோர் ஆற்றிய பங்கேற்க ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் வார்னே – முரளிதரன் ட்ராபி என அழைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் இவருக்குப் பல்வேறு சிறப்பு கௌரவப் பட்டங்களும் பாராட்டுகளும் இந்த மகத்தான ஜாம்பவானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.



