தந்தையர் தின ஸ்பெஷல் ! இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய தந்தை – மகன் ஜோடிகளின் பட்டியல்

SUnil and Rohan Gavaskar Father SOn Cricketers
- Advertisement -

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து பெரியவனாகி சாதனையாளராக உருவாவதற்கு அவரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த தாயும் தந்தையும் இன்றியமையாதவர்கள். சொல்லப்போனால் ஒரு குழந்தை எப்படி வாழ போகிறது என்பது அன்னையும் தந்தையும் வளர்க்கும் வளர்ப்பில் தான் அமையும் என்றே கூறலாம். அந்த வகையில் குடும்பத்திற்காகவும் குழந்தைக்காகவும் வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பை அர்ப்பணிப்பாக செலவழித்து நல்ல வகையில் வளர்த்து இந்த சமுதாயத்தில் ஒரு ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மூச்சிருக்கும் வரை முழுமையாக போராடும் தந்தை தான் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது முதல் ஹீரோ என்றால் மிகையாகாது.

மேலும் ஒரு குழந்தைக்கு தந்தையை விட மிகச் சிறந்த ஆசான் இல்லை என்பதாலேயே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று பொன்னான பழமொழி உள்ளது. அப்படிப்பட்ட தந்தையர்களின் மகத்துவத்தை போற்றும் வகையில் ஜூன் 19-ஆம் தேதி உலகம் முழுவதிலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இந்த அற்புதமான நாளில் கிரிக்கெட் எனும் விளையாட்டில் தாய் நாட்டிற்காக விளையாட ஆதரவையும் வசதிகளையும் செய்து கொடுத்து உறுதுணையாக தங்களது வாழ்நாள் கனவை நிஜமாக்க மிகப்பெரிய உதவியாக இருந்த தங்களது தந்தையர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் தங்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அப்பாக்களின் அன்பையும் பாசத்தையும் நினைவு கூர்ந்தார்கள்.

தந்தை – மகன் ஜோடி:
கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் நாட்டுக்காக விளையாடி பல வெற்றிகளைத் தேடி கொடுக்கும் நட்சத்திரங்கள் தங்களது மகனும் தங்களது பாதையில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்களை கொடுத்து வளர்ப்பார்கள். அதில் சிலரது மகன்கள் மட்டுமே வெற்றிகரமாக தந்தையைப் போல தாய் நாட்டுக்கு விளையாடி கடமையாற்றியுள்ளார்கள். அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடிய தந்தை – மகன் ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. பட்டோடி வீரர்கள்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பட்டோடி எனும் இடத்திற்கு அரசராக இருந்த முகமது இப்திகார் அலிகான் சித்திக் எனும் இவர் 1932 முதல் 1946 வரை இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளுக்காக விளையாடிய பெருமைக்குரியவர். அதில் 6 போட்டிகளில் 199 ரன்களை எடுத்துள்ள இவர் 1 சதம் அடித்துள்ளார்.

அவரின் மகன் முஹம்மத் மன்சூர் அலிகான் சித்திக் பட்டோடி அவரது தந்தை வழியிலேயே கிரிக்கெட் விளையாட விரும்பி 1961 முதல் 1975 வரை அவரைவிட அசத்தலாக இந்தியாவுக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் 2793 ரன்களை எடுத்துள்ளார். 6 சதங்கள் 17 அரை சதங்கள் அடித்துள்ள இவர் ஒரு கண் குறைவான பார்வையிலும் எதிரணிகளை பந்தாடி இந்தியாவுக்காக கேப்டனாகவும் செயல்பட்ட மகத்தான வீரர் ஆவார்.

- Advertisement -

2. அமர்நாத்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லாலா அமர்நாத் எனும் இவர் இந்தியாவுக்காக 1933 – 1955 வரை 24 டெஸ்ட் போட்டிகளில் 878 ரன்களை எடுத்துள்ளார். அதைவிட இவர்தான் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சதமடித்த முதல் வீரர் ஆவார்.

அவரது மகன் மொகிந்தர் அமர்நாத் தனது தந்தையைப் போலவே 1969 – 1988 வரை 69 டெஸ்ட் போட்டிகளிலும் 85 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக அசத்தினார். குறிப்பாக 1983இல் கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் முறையாக வென்ற உலக கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. மஞ்ரேக்கேர்: மும்பையைச் சேர்ந்த விஜய் மஞ்ரேக்கர் எனும் இவர் 1951 – 1965 வரை இந்தியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் 3208 ரன்களை எடுத்துள்ளார். 15 அரை சதங்களையும் 7 சதங்களையும் அடித்துள்ளார்.

இவரின் மகன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 1987 – 1996 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவுக்காக 37 வது டெஸ்ட் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் சுமாராகவே செயல்பட்ட அவர் தற்போது வர்ணனையாளராக புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கவாஸ்கர் வீரர்கள்: மும்பையைச் சேர்ந்த சுனில் கவாஸ்கர் இந்தியா கண்ட வரலாற்றின் முதல் அற்புதமான பேட்ஸ்மேன் என்றே கூறலாம். ஏனெனில் வெறித்தனமான அந்த காலத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான இவர் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

1971 – 1987 வரை 125 டெஸ்ட் மற்றும் 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல ஜாம்பவான்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தார். இவரின் மகன் ரோகன் கவாஸ்கர் இந்தியாவுக்காக 2004இல் அறிமுகமாகி 11 போட்டிகளில் விளையாடிய போதிலும் அவரை போல் சிறப்பாக செயல்படாததால் வந்த வாக்கிலேயே காணாமல் போனார்.

5. பின்னி வீரர்கள்: பெங்களூருவைச் சேர்ந்த ரோஜர் பின்னி இந்தியாவுக்காக 1979 – 1987 வரை 27 டெஸ்ட் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு ஆல்-ரவுண்டராக அசத்தியவர்.

1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய இவரின் மகன் ஸ்டூவர்ட் பின்னி 2014 – 2016 ஆகிய காலகட்டத்தில் இந்தியாவுக்காக 14 ஒருநாள் மட்டும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

6. சிங் வீரர்கள்: பஞ்சாப்பை சேர்ந்த யோக்ராஜ் சிங் கடந்த 1980 – 1986 வரை இந்தியாவுக்காக 1 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் சுமாராகவே விளையாடினார்.

இருப்பினும் 2000இல் அறிமுகமான அவரது மகன் யுவராஜ் சிங் அவரை விட 100 மடங்கு அபாரமாக செயல்பட்டு 2007, 2011 ஆகிய வருடங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ஜாம்பவானாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

Advertisement