டி20 உலககோப்பை வரலாற்றில் மாயாஜால ஹாட்ரிக் எடுத்த 4 பவுலர்களின் பட்டியல்

Lee
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் தங்களுக்கு நாட்டுக்காக கோப்பையை வெல்ல முழு திறமையை வெளிப்படுத்தி போராட அனைத்து பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் மும்முரமாக தயாராகி வருகிறார்கள். இருப்பினும் ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகையால் பந்து வீச்சாளர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது. ஏனெனில் எப்படியாவது அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் புத்தகத்தில் உள்ள ஷாட்களை விட்டுவிட்டு எப்படியாவது, உருண்டு பிரண்டு சரமாரியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விடுகிறார்கள்.

அந்த கலையை ஏபி டிவிலியர்ஸ் அறிமுகப்படுத்தியதால் இப்போதெல்லாம் அனைவருமே அவரைப்போலவே விளையாடி பவுலர்களை வெளுக்கிறார்கள். மேலும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பவுலர்கள் திட்டம்போட்டு பந்து வீசினால் மேக்ஸ்வெல் போன்றவர்கள் கடைசி நொடியில் இடதுகை பேட்ஸ்மேனாக மாறி சிக்சர்களை பறக்க விடுகிறார்கள். இது போக நோ-பால் போட்டால் அதற்கு தண்டனையாக ப்ரீ ஹிட், ஓவருக்கு 2 பவுன்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் போன்ற அடிப்படை விதிமுறைகளே பந்து வீச்சாளர்களுக்கு எதிராக உள்ளது.

- Advertisement -

ஹாட்ரிக் நாயகர்கள்:
அந்த விதிமுறைகளை தாண்டி 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விடுவதற்கும் தயங்காத பேட்ஸ்மேன்களை சமாளித்து துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பது பவுலர்களுக்கு உண்மையாகவே கடினமான ஒன்றாகும். அப்படி டி20 போட்டியில் ஒரு விக்கெட் எடுப்பதே கடினம் என்ற நிலைமையில் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை எடுத்து 3வது பந்தில் ரன்களை அடிக்காவிட்டாலும் பரவாயில்லை விக்கெட்டை விட்டுவிடக்கூடாது என்று எண்ணத்துடன் களமிறங்கும் பேட்ஸ்மேனையும் அவுட்டாக்கி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுப்பதற்கு ஒரு பவுலர் கண்டிப்பாக மாயாஜால திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் சவால் நிறைந்த டி20 உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த பவுலர்களை பற்றி பார்ப்போம்:

1. ப்ரட் லீ: ஆஸ்திரேலியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் கடந்த 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலக கோப்பையில் கேப் டவுன் நகரில் வங்கதேசத்துக்கு எதிராக வீசிய 17வது ஓவரில் ஷாகிப் அல் ஹசன், மஸ்ரபி மோர்தசா, அலோக் கபாலி ஆகியோரை அடுத்தடுத்த 3 பந்துகளில் காலி செய்தார்.

- Advertisement -

அதன் வாயிலாக சர்வதேச டி20 மற்றும் உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளராக அவர் சாதனை படைத்தார். அவரது அதிரடியில் வெறும் 123/8 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டிய ஆஸ்திரேலியா பின்னர் 9 ரன்கள் விக்கெட் வித்யாசத்தில் எளிதாக வென்றது.

2. குர்ட்டிஸ் கேம்பர்: அதன்பின் 2009, 2010, 2012, 2014, 2016 ஆகிய வருடங்களில் நடந்த உலகக் கோப்பைகளில் எந்த பவுலரும் ஹாட்ரிக் எடுக்காத நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் மட்டும் 3 ஹாட்ரிக் நிகழ்ந்தது. அதில் முதலாவதாக அபுதாபியில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து வெறும் 106 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

காரணம் 10வது ஓவரில் பந்து வீசிய இவர் ஆக்கர்மேன், டேன் டஸ்சேட், எட்வர்ட்ஸ், வேன் டெர் மெர்வி ஆகிய 4 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த 4 பந்துகளில் அவுட் செய்து ஹாட்ரிக்கையும் மிஞ்சி டபுள் ஹாட்ரிக் எடுத்து வரலாறு படைத்தார். அவரது அதிரடியால் இறுதியில் அயர்லாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

3. வணிந்து ஹசரங்கா: அதே உலக கோப்பையில் சார்ஜாவில் நடைபெற்ற 25ஆவது போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 143 ரன்களை கட்டுப்படுத்தும் போது ஐடன் மார்க்ரம், தெம்பா பவுமா, ட்வயன் பிரிடோரியஸ் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களை 18வது ஓவரில் அடுத்தடுத்து அவுட் செய்து சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய இவர் இலங்கையை முன்னிலைப் படுத்தினார். ஆனாலும் அதிலிருந்து மீண்டெழுந்த தென்னாபிரிக்கா கடைசி ஓவரில் போராடி வெற்றி பெற்றது.

4. ககிசோ ரபாடா: அதே தொடரில் 39வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து 19வது ஓவரில் 176/5 என்ற நிலையில் வெற்றியை நெருங்கியது.

குறிப்பாக கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது பந்தை கையிலெடுத்த இவர் கிறிஸ் ஓக்ஸ், கேப்டன் இயன் மோர்கன், கிறிஸ் ஜோர்டான் ஆகிய 3 முக்கிய வீரர்களை முதல் 3 பந்திலேயே அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் இங்கிலாந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.

Advertisement