பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றின் வெற்றியாளர்க்ள் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் – மெகா பட்டியல்

Sachin Tendulkar Allan Border Sunil Gavaskar
- Advertisement -

90களில் மிகப்பெரிய எழுச்சி கண்ட ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்கும் அணியாக சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களின் வருகையால் இந்தியாவும் அபார வளர்ச்சி கண்டது. அதனால் 1947 முதல் அவ்வப்போது மோதி வந்த டெஸ்ட் தொடர்களை வரும் காலங்களில் தொடர்ந்து நடத்துவது என்றும் அதற்கு தங்களது நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடித்த முதல் வீரர்களாக சாதனை படைத்த சுனில் கவாஸ்கர் – ஆலன் பார்டர் ஆகிய ஜாம்பவான்களின் பெயரை சூட்டுவது என்றும் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்தன.

அந்த வகையில் உதயமான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த 20 வருடங்களில் நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பைக்கு சவால் கொடுக்கும் வகையில் சச்சின், பாண்டிங் போன்ற ஏராளமான நட்சத்திர வீரர்களின் மோதல்களால் உலகப் புகழ்பெற்று உலகத்தரம் வாய்ந்த தொடராக உருவெடுத்துள்ளது. அந்த வரிசையில் இந்த கோப்பை தற்போது பிப்ரவரி 9 முதல் இந்திய மண்ணில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் இந்த கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதுகள் வென்ற வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சச்சின் டெண்டுல்கர்: கடந்த 1996ஆம் ஆண்டு முதல் முறையாக வெறும் ஒரு டெஸ்ட் போட்டியுடன் துவங்கப்பட்ட இந்த தொடரை இந்தியா வென்றது. அதை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற்ற இத்தொடரில் ஷேன் வார்னேவை பல தருணங்களில் அடித்து நொறுக்கி 446 ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார்.

2. சச்சின் டெண்டுல்கர்: 1999 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்தியா 3 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அந்த தொடரில் கேப்டனாக முன்னின்றி 278 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

3. ஹர்பஜன் சிங்: 2001ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது போட்டியில் லக்ஷ்மன் – டிராவிட் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப் காரணமாக அபார வெற்றி பெற்ற இந்தியா இறுதியில் சென்னையிலும் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் வரலாற்றின் மிகச் சிறந்த வெற்றி பெற்றது.

அத்தொடரில் அறிமுகமாக களமிறங்கிய ஹர்பஜன் சிங் கொல்கத்தாவில் ஹாட்ரிக் எடுத்தது உட்பட மொத்தம் 32 விக்கெட்டுகளை சாய்த்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

4. ராகுல் டிராவிட்: 2003 இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய இந்தியா 1 – 1 (4) என்ற கணக்கில் கடுமையாக போராடி தொடரை சமன் செய்தது. குறிப்பாக அடிலெய்ட் போட்டியில் இரட்டை சதமடித்து மொத்தமாக 619 ரன்கள் குவித்த ராகுல் டிராவிட் தொடர் நாயகன் விருது பெற்றார்.

5. டேமின் மார்ட்டின்: கடந்த 2004இல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்க 444 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகன் விருது வென்றார்.

- Advertisement -

6. பிரட் லீ: 2008ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் 493 ரன்கள் குவித்தும் 24 விக்கெட்டுகளை சாய்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகன் விருதை வென்றார்.

7. இஷாந்த் சர்மா: 2008இல் இந்திய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரை 2 – 0 (4) என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களை திணறடித்து 15 விக்கெட்கள் எடுத்து அசத்திய இவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

8. சச்சின் டெண்டுல்கர்: 2010இல் மீண்டும் இந்தியாவில் நடைபெற்ற இத்தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு 403 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இவர் 3வது முறையாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் தொடர் நாயகன் விருது வென்று சரித்திரம் படைத்தார்.

9. மைக்கேல் க்ளார்க்: 2011இல் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் தோனி தலைமையிலான இந்தியாவை 4 – 0 (4) தோற்கடிக்க 626 ரன்கள் குவித்து கேப்டனாக அசத்திய இவர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

10. ரவிச்சந்திரன் அஸ்வின்: அதற்கு பழி வாங்கும் வகையில் இந்தியாவில் நடைபெற்ற 2012 தொடரை 4 – 0 (4) என்ற கணக்கில் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி 29 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

11. ஸ்டீவ் ஸ்மித்: அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2014இல் நடைபெற்ற அத்தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல 769 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகன் விருது பெற்றார். அத்தொடரில் தான் தோனியின் ஓய்வும் கேப்டன் விராட் கோலியின் எழுச்சியும் அரங்கேறியது.

12. ரவீந்திர ஜடேஜா: கடைசியாக 2017இல் இந்திய மண்ணில் நடைபெற்ற இத்தொடரில் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு 25 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

13. செட்டேஸ்வர் புஜாரா: 2019/20இல் வரலாற்றில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சரித்திரம் படைக்க 521 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகன் விருது வென்று கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

14. பட் கமின்ஸ்: கடைசியாக 2020/21இல் மீண்டும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியா சரித்திரம் படைத்தாலும் 21 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தலாக செயல்பட்ட இவர் ஆஸ்திரேலியா ஆறுதல் அடையும் வகையில் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: மார்க் பண்ணி வெச்சுக்கோங்க மார்க், நேரலையில் வர்ணனையை விட்டு ஸ்லெட்ஜிங் செய்துகொண்ட மார்க் வாக் – டிகே

மொத்தத்தில் இதுவரை நடைபெற்ற 15 தொடர்களில் 10 வெற்றிகளை சுவைத்துள்ள இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. ஆஸ்திரேலியா 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

Advertisement