வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடர் மழையின் காரணமாக 1 – 1 (3) என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 2 போட்டிகளும் மழையால் ரத்து செய்யப்பட்டது.
அந்த நிலையில் முக்கியமான கடைசிப் போட்டி ஜூன் 15ஆம் தேதி ப்ரெடி கிரிக்கெட்ல மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் சாய் ஹோப் – எவின் லிவிஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து அயர்லாந்து பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள்.
வீராப்பை காட்டிய வெ.இ:
10 ஓவர்கள் வரை வெளுத்து வாங்கிய அந்த ஜோடி அறிமுக அயர்லாந்து பவுலர் லியம் மெக்கார்தியை சூறையாடி 122 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்தது. அதில் ஷாய் ஹோப் அரை சதத்தை அடித்து 51 (27) ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ரோவ்மன் போவல் 2 (3) ரன்னில் நடையைக் கட்டினார். மறுபுறம் பட்டாசாக விளையாடிய லெவிஸ் 7 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 91 (43) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர் அதிரடியாக விளையாட முயற்சித்து முறையே 15 (7), 18 (13) ரன்னில் அவுட்டானார். ஆனால் மிடில் ஆர்டரில் 4 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட கேசி கார்ட்டி 49* (22) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து 3 சிக்சரை பறக்க விட்ட ரோமாரியா செபாஃர்ட் 19* (6) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவரில் 256/5 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.
மோசமான உலக சாதனை:
அயர்லாந்துக்கு அதிகபட்சமாக மேத்தியூ ஹம்பிரைஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அறிமுக வீரர் லியான் மெக்கார்த்தி 4 ஓவரில் 81 ரன்கள் வழங்கினார். அதன் வாயிலாக அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் வழங்கிய முழு அந்தஸ்து பெற்ற நாட்டு வீரர் மோசமான உலக சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க: 151/5 டூ 155க்கு அவுட்.. ஹாட்ரிக் உட்பட 5 பந்தில் 5 விக்கெட்ஸ்.. ஐபிஎல் முடிந்தும் மாஸ் காட்டிய திக்வேஷ்.. சஞ்சீவ் பாராட்டு
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையின் கசன் ரஜிதா தனது அறிமுகப் போட்டியில் 75 ரன்கள் வழங்கியதே முந்தைய சாதனை. அடுத்து விளையாடிய அயர்லாந்து முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 194/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக மார்க் அடைர் 48, ஹேரி டெக்டர் 38 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆக்கில் ஹுசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.



