
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்தியா அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியினர் அந்நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கத்துகுட்டியான ஜிம்பாப்வேக்கு எதிராக வழக்கம் போல சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 2019க்குப்பின் சதமடிக்காமல் சுமாரான பார்மில் இருந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கு இந்த ஜிம்பாப்வே தொடரில் ஓய்வளிக்கப்பட்டது நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியது.
தனது அபார பேட்டிங் திறமையால் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் அவர் 2017 முதல் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். அந்த அத்தனை வேலைகளிலும் அபாரமாக செயல்பட்ட அவர் அந்த வேலைகளை செய்ததால் ஏற்பட்ட பணிச்சுமை தற்போது 3 வருடங்களாக சதமடிக்க முடியாத அளவுக்கு மெகா வீழ்ச்சியை சந்திக்க வைத்துள்ளது. அதனால் பொறுமையிழந்த கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் எத்தனை நாட்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படாமல் அணியில் நீடிக்க முடியும் என்ற வகையில் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்தனர்.
ராசாவின் ஆதரவு:
ஆனால் வரலாற்றில் ஜாம்பவான்கள் என்ற பெயருடைய நிறைய வீரர்கள் 70 சதங்களை அடித்ததில்லை என்பதால் இந்த மோசமான தருணத்திலிருந்து விராட் கோலி நிச்சயம் மீண்டு வருவார் என்ற வகையில் ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா, கெவின் பீட்டர்சன் போன்ற நிறைய வெளிநாட்டு ஜாம்பவான்கள் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள ஜிம்பாப்வேயின் நம்பிக்கை நட்சத்திர வீரர் சிகந்தர் ராசா விராட் கோலி போன்ற தரமான வீரரை விமர்சிக்க இங்கு நிறைய பேருக்கு தகுதி இல்லாததால் அனைவரும் அமைதியாக இருந்தாலே அவர் பார்முக்கு திரும்பி விடுவார் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்திய வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு ஜிம்பாவே கோப்பையை வெல்ல அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய இவர் அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறார். அந்த நிலைமையில் கோல்ஃப் விளையாட்டின் டைகர் உட்ஸ் குத்துச்சண்டையின் முகமது அலி போன்றவர்களை போல் தரத்திலும் தரமான விராட் கோலி மீது வைக்கும் விமர்சனங்கள் பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
டைகர் உட்ஸ் போன்றவர்:
“விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் திறமையுடைய வீரர். அவரை டைகர் வுட்ஸ், முகமது அலி போன்ற விளையாட்டை மாற்றி அமைத்த வீரர்களின் பட்டியலில் நான் சேர்க்க விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் யாருமே நினைக்காத விஷயங்களை செயலில் செய்து காட்டி அதை அனைவரும் பின்பற்ற வைத்துள்ளார்கள். கிரிக்கெட் என்பது பிட்னஸை பொருத்த விளையாட்டாகும். அந்த வகையில் கிரிக்கெட்டில் பிட்னஸ் அம்சத்தை அடுத்த தலைமுறை வீரர்கள் பின்பற்றும் அளவுக்கு விராட் கோலி புதிய தரத்திற்கு கொண்டு வந்தது அபாரமானது. சொல்லப்போனால் அனைவரும் அதற்காக அவரை பாராட்ட வேண்டும்”
“இந்த இடத்தில் 16 – 20000 ரன்களுக்கு மேல் குவித்து ஏகப்பட்ட அனுபவம் கொண்ட அவரைப் போன்ற ஒருவருக்கு ஆலோசனை கொடுக்கும் அளவுக்கு நான் அனுபவம் பெற்றவன் கிடையாது என்று நினைக்கிறேன். அவருக்கு நான் என்ன சொல்ல முடியும்? எதுவும் நான் சொல்லப்போவதில்லை. எனவே அனைவரும் விராட் கோலியை விமர்சிக்காமல் அமைதியாக அவரை தனியாக விடுங்கள். நீங்கள் அதை செய்தாலே அவர் மீண்டும் தன்னுடைய உச்சபட்ச பார்மில் செயல்பட தொடங்கி விடுவார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2022 : பாபர் அசாம் இருந்தாலும் அவரமாதிரி தரமான ப்ளேயர் எங்ககிட்ட இல்ல, இந்திய வீரரை பாராட்டும் முன்னாள் பாக் வீரர்
அவர் கூறுவது போல இன்றைய நவீன கிரிக்கெட்டில் பிட்னஸ் என்பது காயமின்றி நீண்ட நாட்கள் சிறப்பாக செயல்பட இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அந்த அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த விராட் கோலி இந்திய அணியில் விளையாடும் அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் கண்டிப்புடன் இருந்தார். அதன் காரணமாக இன்றைய இந்திய அணியில் நல்ல பிட்னஸ் உடன் இருந்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலைமை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.