சுயநினைவோட சொல்றேன்.. தோனி இல்லனா.. முட்டாள் கூட இதை செய்வாங்க.. அஸ்வின் செல்ஃபிஷ் பிளேயர் – எல்எஸ் மெகா விமர்சனம்

lakshman sivaramakrishnan 2
- Advertisement -

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நட்சத்திர சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வானது தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் அமைந்தது. ஏனெனில் 2011 உலகக்கோப்பை உட்பட நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்தது தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தமிழகத்தின் ஒரு அடையாளமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் தமிழக மூத்த வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் அவரை ட்விட்டரில் தாறுமாறாக விமர்சித்துள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. முதலில் 2023 உலகக்கோப்பை வர்ணனையாளர்கள் பட்டியலில் ஒரு முன்னாள் ஸ்பின்னர்கள் கூட இடம் பிடிக்கவில்லை என்று விமர்சனத்தை துவக்கிய அவரிடம் ஒரு ரசிகர் அஸ்வின் பெயரை குறிப்பிட்டு பதிலளித்தார்.

- Advertisement -

அடுக்கடுக்கான விமர்சனம்:
அதற்கு அஸ்வின் எளிதாக அதிக விக்கெட்களை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய மண்ணில் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர் அதனாலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக தடுமாறுவதாக முதல் விமர்சனத்தை வைத்தார். அதனால் கொந்தளித்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற சவாலான வெளிநாடுகளில் அஸ்வின் சாதனையை புரட்டிப் பாருங்கள் என்று அவர் மேலும் பதிலடி கொடுத்தார்.

சொல்லப்போனால் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமையுங்கள் என்று அஸ்வின் மைதான பராமரிப்பாளர்களிடம் நேரடியாக சொன்னதை பலமுறை தாமே பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் என்ன சாதாரண முட்டாள்கள் கூட விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று அவர் பகிரங்கமாக விமர்சித்தார். அப்போது உலகக்கோப்பையில் வர்ணனை செய்யும் வேலை கிடைக்கவில்லை என்பதற்காகவும் அஸ்வின் மீதான பொறாமையிலும் இப்படி பேசுகிறீர்கள் என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அதற்கு ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் தோனியின் கீழ் விளையாடாமல் போயிருந்தால் ஹர்பஜன் இருந்ததன் காரணமாக அஸ்வினுக்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது என்று மீண்டும் சிவராமகிருஷ்ணன் தாறுமாறாக விமர்சித்தார். அத்துடன் இந்தியா சிமெண்ட் கம்பெனிக்காக விளையாடி பின்னர் செம்பிளாஸ்ட் எனும் கம்பெனிக்காக மாறி விளையாடிய அஸ்வினுக்கு ரசிகர்களான நீங்கள் தான் கோயில் கட்டி பெருமை பேச வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இவை அனைத்தையும் விட அஸ்வின் ஒரு சாதனைக்காக விளையாடும் சுயநலமான வீரர் என்றும் ராமகிருஷ்ணன் பகிரங்கமாக பதிவிட்டார். அதனால் சந்தேகமடைந்த ரசிகர்கள் ஒருவேளை அவரின் ட்விட்டர் கணக்கில் வேறு யாரோ இப்படி பதிவு செய்கிறார்களா என்று கேட்டார்கள். அதற்கு இல்லை நான் தான் இவற்றை சுயநினைவோடு பதிவிடுகிறேன் என்று தம்முடைய பூஜை அறையில் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ள சிவராமகிருஷ்ணன் 20 – 30 ட்வீட்களை போட்டு அஷ்வினை சரமாரியாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement