1992 உலக கிரிக்கெட் சாம்பியன் பாகிஸ்தான் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்பே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் கடந்த வருடம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அப்படியே தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரிலும் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது.
அதை விட 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. அதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.
ஒய்ட்வாஷ் படுதோல்வி:
கடைசிப் போட்டி ஏப்ரல் ஐந்தாம் தேதி மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்றது. மழையால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 264/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 59, ரைஸ் மரியோப் 58 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆகிப் ஜாவேத் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் மீண்டும் சுமாராக பேட்டிங் செய்து 40 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக பென் சீர்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இளம் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் மீண்டும் தோற்றது.
வெறியுடன் ஓட்டம்:
அதன் காரணமாக அப்போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் அந்த வழியாக சென்ற பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா’வை கடுமையாக கிண்டலடித்து திட்டியதாகத் தெரிகிறது. அதனால் கோபமடைந்த அவர் உச்சகட்ட வெறியுடன் அந்த ரசிகர்களை அடித்து நொறுக்குவதற்காக ஓடினார். நல்லவேளையாக அங்கிருந்த பாதுகாவலர்கள் பாதுகாப்புச் சுவரை தாண்டுவதற்கு முன் அவரை இழுத்துப் பிடித்து நிறுத்தினார்கள்.
இதையும் படிங்க: தோனி தான் இப்படி எல்லாரையும் கெடுத்தது .. அவரை பாத்து பாண்டியாவும் வெற்றியை விட்டாரு.. முரளி கார்த்திக்
இல்லையென்றால் குஷ்தில் ஷா ஓடிய வேகத்திற்கு அங்கு அடிதடி ஏற்பட்டிருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி “இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சில ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை தொடர்ச்சியாக கிண்டலடித்து திட்டியுள்ளார்கள். அதை நிறுத்துமாறு குஷ்தில் ஷா கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வெளிநாட்டு ரசிகர்கள் தொடர்ந்து திட்டியதாலேயே குஷ்தில் ஷா அவ்வாறு நடந்து கொண்டார்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.



