இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தற்போது நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளில் இருந்தே ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியானது தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது
லாசித் மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ் :
நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி எளிதாக வெற்றிகளை பெற்று தற்போது இறுதிப் போட்டிக்கும் நுழைந்ததற்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த தொடரில் மிடில் ஓவர்களின் போது பந்துவீசும் குல்தீப் யாதவ் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துகிறார்.
அதுமட்டுமின்றி தேவையான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அணிக்கு திருப்புமுனையும் ஏற்படுத்துகிறார். இதன் காரணமாக இந்திய அணியின் முக்கிய வீரராகவும் இந்த தொடரில் திகழ்ந்து வருகிறார். இதுவரை இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை குவித்திருக்கும் வேளையில் இன்று செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் முன்னாள் இலங்கை ஜாம்பவானான லாசித் மலிங்காவின் ஒரு ஆல்டைம் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆசிய கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உலகளவில் லாசித் மலிங்கா முதலிடத்தில் இருக்கிறார்.
இதுவரை அவர் ஆசிய கோப்பை தொடரில் மட்டும் 33 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். இவ்வேளையில் அவருக்கு அடுத்து குல்தீப் யாதவ் 32 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 34 விக்கெட்டுகளை குவித்து ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : தோனி மற்றும் ரிஷப் பண்டின் சாதனையை உடைக்க சஞ்சு சாம்சனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ
அதுமட்டும் இன்றி ஒரு ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கும் முன்னாள் வீரர் இர்பான் பதானின் (14) சாதனையை முறியடித்தும் முதல் இடத்திற்கு சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.



