
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அதில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணியில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட மற்ற அணிகளைக் காட்டிலும் உலகத்தரமான வீரர்கள் நிறைந்துள்ளார்கள். இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு குல்தீப் யாதவ் விளையாடுவது முக்கியம் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குல்தீப் விளையாட வேண்டும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் கடைசி வரை அவரை கௌதம் கம்பீர் – சுப்மன் கில் கூட்டணி களமிறக்கவில்லை. அதனால் இந்தியா போராடி தொடரை சமன் செய்ததே தவிர கோப்பையை வெல்ல முடியவில்லை. அப்படி கேப்டனாக சுப்மன் கில் செய்த அந்த சொதப்பலை சூரியகுமாரும் செய்யாமல் குல்தீப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மதன் லால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி மதன் லால் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவருடைய தனித்துவமான பவுலிங் ஸ்டைலை டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் அடித்து நொறுக்குவது கடினமாக இருக்கும். அவருடையத் தேர்வு பற்றிய இறுதி முடிவு பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும். ஆனால் துபாயில் 2 ஸ்பின்னர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும்”
“இந்தியா தங்களுடைய திறன் காரணமாக கோப்பையை வெல்வதற்கு வலுவான அணியாக இருக்கிறது. அவை கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்தது. ஆப்கானிஸ்தான் தற்போது நன்றாக விளையாடி வருகிறது”
இதையும் படிங்க: 2 ஓவரில் 40 ரன்ஸ் கொடுத்தாலும் இதை செய்யச் சொன்ன.. தோனியின் சிஎஸ்கேவில் விளையாட ஆசை.. சிவம் மாவி
“ஸ்ரேயாஸ் ஐயர் நமது அணிகள் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து சர்ச்சைகள் காணப்படுகின்றன. அது போன்ற தேர்வுகள் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எடுக்கிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலைக் கொடுக்கும் அணியாக இருக்கிறது. ஏனெனில் பாகிஸ்தான் அணி தற்சமயத்தில் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் கேள்விக்குரியதாக இருக்கிறது. இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் வலுவானவர்களாகவே இருக்கிறார்கள்” என்று கூறினார்.