
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அங்கே விராட், ரோஹித் இல்லாமல் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 2 என்ற கணக்கில் சமன் தொடரை செய்தது. குறிப்பாக கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது.
ஒருவேளை அத்தொடரை இழந்திருந்தால் அதற்கு குல்தீப் யாதவ் விளையாடாததே முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் சைனாமேன் என்ற வித்தியாசமான பவுலிங் ஆக்சன் கொண்ட அவர் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுப்பார். எனவே இங்கிலாந்தில் அவர் விளையாட வேண்டும் என்று அனைத்து முன்னாள் வீரர்களும் கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் பேட்டிங்கை ஆழப்படுத்துவதற்காக ஜடேஜா, சுந்தரை தேர்ந்தெடுத்த பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அவரை தொடர் முழுவதும் பெஞ்சில் அமர வைத்தார். இந்நிலையில் இங்கிலாந்தில் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்வாய் என்று கம்பீர் தம்மிடம் ஆரம்பத்திலேயே தெரிவித்து விட்டதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். அணியின் காம்பினேஷனுக்காக எடுக்கப்பட்ட அந்த முடிவை தாம் ஏற்று கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஆசியக் கோப்பையில் அடுத்தடுத்த 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சில சமயங்களில் நான் விளையாடுவேன் என்று நினைப்பேன். துரதிஷ்டவசமாக பேட்டிங் வரிசையில் ஆழம் அல்லது சேர்க்கைக் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைப்பற்றி கௌதம் பாய் என்னிடம் நேரடியாக சொல்லி விட்டார். அது திறன் அல்லது பேட்டிங் பற்றியது கிடையாது. சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அணியின் கலவைக்காக தீர்மானிக்கப்பட்டது”
“இருப்பினும் அங்கே என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட நான் நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் விளையாடாவிட்டாலும் நிறைய கவனித்து நல்ல வீரராக வர முடியும். மற்றவர்களைக் குறை சொல்வது எளிது. ஆனால் அதை ஏற்றுக்கொண்டு உங்களுடைய பலவீனத்தில் வேலை செய்து முன்னேற வேண்டும். ஆசியக் கோப்பையில் விளையாடும் போது சவால் இருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக விளையாடும் போது ரிதம் செட்டாகியிருக்கும்”
இதையும் படிங்க: இதான் பாகிஸ்தானின் படிக்காத தராதரமா? முட்டாள்தனமாக பேசிய யூசுபை விளாசிய மதன் லால்
“அதனால் எப்படி பவுலிங் செய்வது, களத்தில் நேரத்தை செலவிடுவது என்பது தெரியும். இங்கிலாந்தில் விளையாடாததால் அது கொஞ்சம் தவறியது. இருப்பினும் அங்கே பயிற்சிகளை எடுத்த நான் ஃபிட்னஸை முன்னேற்றி துலீப் கோப்பையில் விளையாடினேன். அங்கே விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும் 35 ஓவர்கள் வீசியது எனது ரிதத்தை செட்டாக்க உதவியது. அதிகமாக சிந்திக்காமல் எனது பலத்தில் கவனம் செலுத்தி சரியான இடத்தில் பந்து வீசுவதே என்னுடைய மனநிலையாகும்” என்று கூறினார்.