
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானை 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இந்தியா சிறப்பாக பந்து வீசியது.
சொல்லப்போனால் அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஃபர்கான் 57 (38), பகார் ஜமான் 46 (35) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதனால் 113/1 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தானை மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய இந்தியா சுருட்டியது. குறிப்பாக 17வது ஓவரில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தானை சுருட்ட முக்கிய பங்காற்றினார்.
இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் 4, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் பட்டேல் 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். இந்தத் தொடரில் ஆரம்ப முதலே அசத்திய குல்தீப் யாதவ் 7 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்கள் எடுத்துள்ளார். குறிப்பாக இறுதிப்போட்டியில் மட்டும் 4 ஓவரில் 30 ரன்கள் கொடுத்த அவர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதன் வாயிலாக ஒரு ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (17) எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன் 2004 ஆசிய கோப்பையில் இர்பான் பதான் 14 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அது மட்டுமின்றி ஒரு ஆசியக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற அஜந்தா மெண்டிஸ் ஆல் டைம் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் 2007 ஆசியக் கோப்பையில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் மாயாஜாலம் செய்து 17 விக்கெட்டுகள் எடுத்ததை மறக்க முடியாது. இது போக ஆசியக் கோப்பை வரலாற்றில் குல்தீப் யாதவ் மொத்தமாக 36 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற மலிங்கா சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தோத்தாலும் பரவலால்ல.. அது இருக்க வரைக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தான் எதிரி.. ரசித் லதீப் பேட்டி
இதற்கு முன் இலங்கை அணிக்காக விளையாடிய ஜாம்பவான் மலிங்கா 33 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அந்தப் பட்டியல்:
1. குல்தீப் யாதவ் (இந்தியா): 36*
2. லசித் மலிங்கா (இலங்கை) 33
3. முத்தையா முரளிதரன் (இலங்கை): 30
4. ரவீந்திர ஜடேஜா (இந்தியா): 29
5. ஷாகிப் அல் ஹசன் : 28