IND vs WI : 49 வருட இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அரிதான சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா – குல்தீப் யாதவ், விவரம் இதோ

Jadeja Kuldeep
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 23 ஓவரில் வெறும் 114 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 43 (45) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் சாய்த்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 115 ரன்கள் என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5, ஷார்துல் தாக்கூர் 1 என டாப் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சாதனை ஜோடி:
இருப்பினும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட இசான் கிசான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் கடைசியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 12* ரன்களும் எடுத்து 22.5 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்ததால் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 2 விக்கெட்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றினாலும் 3 ஓவரில் 2 மெய்டன் உட்பட 6 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இப்போட்டியில் ப்ரெண்டன் கிங் 17, கெய்ல் மெஹர்ஸ் 2, அலிக் அதனேஷ் 22 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 45/3 என தடுமாறிய அந்த அணியை நங்கூரமாக நின்று காப்பாற்ற முயற்சித்த சிம்ரோன் ஹெட்மயரை 11 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்து வந்த ரோவ்மன் போவல் 4, ரொமாரியா செப்பர்டு 0 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி பெரிய நெருக்கடியை கொடுத்தார்.

- Advertisement -

அந்த நிலையில் அடுத்ததாக வந்த டாமினிக் ட்ரெக்ஸ் 3, யானிக் கேரி 3, ஜெய்டேன் சீல்ஸ் 0 என டெயில் எண்டர்கள் கை கொடுக்க முடியாத அளவுக்கு ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த குல்தீப் யாதவ் மறுபுறம் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் வகையில் நங்கூரமாக போராடிய கேப்டன் சாய் ஹோப்பையும் 43 (45) ரன்களில் அவுட்டாக்கினார். அப்படி வேகப்பந்து வீச்சாளர்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஜோடியாக சேர்ந்து 7 விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஆச்சரியப்படும் வகையில் அந்த இருவருமே இடது கை ஸ்பின்னர்களாக சேர்ந்து இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி 7 விக்கெட்களை சாய்த்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய இடது கை சுழல் பந்து வீச்சு ஜோடி என்ற அரிதான சாதனையை ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் படைத்துள்ளனர்.

இதையும் படிங்க:IND vs WI : அவரை மாதிரி ஒரு சீனியர் டீம்ல இருக்குறது ரொம்பவே ஹெல்ப்பா இருக்கு – ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் பேட்டி

பொதுவாக அஸ்வின் – ஜடேஜா போன்ற இடது – வலது கை ஸ்பின்னர்கள் தான் ஜோடி சேர்ந்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பது வழக்கமாகும். அந்த வகையில் கடந்த 1974 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியாவுக்கு இது போல 2 இடது கை ஸ்பின்னர்கள் ஜோடி சேர்ந்து 7 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. தற்போது தான் 49 வருடங்களில் முதல் முறையாக ஜடேஜா – குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த அரிதான சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement