
இந்திய கிரிக்கெட் அணி வதோதராவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்றது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்ற நியூசிலாந்து தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை 47.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து எட்டிய நியூசிலாந்து எளிதான வெற்றி பெற்றது.
அந்தளவுக்கு அப்போட்டியில் இந்திய பவுலர்கள் சுமாராக பந்து வீசியது தோல்விக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதில் பிரசித் கிருஷ்ணா கேட்ச் தவற விட்டதால் குல்தீப் யாதவுக்கு கிடைக்க வேண்டிய விக்கெட் பறிபோனது என்று சொல்லலாம்.
ஆனால் அவரை விட அதிக அனுபவத்தைக் கொண்ட ரவீந்திர ஜடேஜா மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அளவுக்கு தடுமாற்றமாக பந்து வீசினார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா குழப்பத்துடன் பந்து வீசுவதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் விளையாடுவது சரியான தேர்வாக இருக்கும் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆனால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியிலேயே தேர்ந்தெடுக்கப்படாத அவர் காயமடைந்த வாசிங்டன் சுந்தருக்கு பதிலாகவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை விட்டுவிட்டு உள்ளூரில் போதுமான அனுபவமில்லாத ஆயுஷ் படோனியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த மோசமான தேர்வை ஸ்ரீகாந்த் விமர்சித்தது பின்வருமாறு.
“ரவீந்திர ஜடேஜா எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை என்பது போல் நமக்குத் தெரிகிறது. பந்து வீச்சில் அவர் அட்டாக் செய்யலாமா அல்லது பந்தை காற்றில் சுழற்றலாமா என்ற குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் அக்சர் பட்டேலை ஏன் கொண்டு வரவில்லை என்பது திறந்த ரகசியமாகும்”
இதையும் படிங்க: ஒரே ஓவரில் 32 ரன்ஸ்.. 41 பந்தில் 100.. பிக்பேஷில் 2வது சரவெடி சாதனை சமன் செய்த ஸ்மித்.. மாஸ் வெற்றி
“ஆல் ரவுண்டர் கண்டிப்பாக வேகப்பந்து வீச்சளாராக இருக்க வேண்டுமா? ஏன் 3 வேகப்பந்து வீச்சாளர் 3 ஸ்பின்னர்களை விளையாட வைக்கக்கூடாதா? ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்புவது அசாத்தியமானது. அதனால் அக்சர் பட்டேல் விளையாடுவதற்கு பொருத்தமானவராக இருப்பார். நமது அணியில் 6வது பவுலர் இல்லை. கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவி அவர் திடீரென அணியிலேயே இல்லை” என்று கூறினார்.