இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தின் அணுகுமுறை நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதாவது பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல பேட்டிங் செய்த இங்கிலாந்து நிறைய வெற்றிகளை பெற்றது.
அந்த வரிசையில் 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இத்தொடரை வெல்வோம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் வென்ற அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 399 ரன்களை சேசிங் செய்யும் போது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஸ்ரீகாந்த் விமர்சனம்:
அதை விட 3வது போட்டியில் 557 ரன்களை துரத்தும் போது மீண்டும் அதிரடி காட்ட முயற்சித்த அந்த அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் வேண்டுமானால் அதிரடியாக பேட்டிங் செய்யலாம் ஆனால் அனைத்து பேட்ஸ்மேன்களாலும் அவ்வாறு விளையாடுவது அசாத்தியம் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
எனவே அந்த எண்ணத்துடன் இந்தியாவுடன் மோதினால் வெல்ல முடியாது என்று இங்கிலாந்தை எச்சரிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “சாத்தியமானால் இங்கிலாந்து அடுத்த விமானத்தைப் பிடித்து வீட்டுக்கு திரும்பலாம். ஆனால் அவர்கள் அடுத்த 2 போட்டிகளில் விளையாடியாக வேண்டும். இந்த பேஸ்பால் மற்றும் அவர்கள் பரப்பிய கோட்பாடுகள் வேலையாகவில்லை என்று நான் நினைக்கிறேன்”
“அது எங்கே வேலை செய்தது? அது ஆஷஸ் தொடரில் வேலை செய்ததா? வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் அவர்கள் இப்படி விளையாடினால் எதுவும் பலிக்காது. பேஸ்பால் கோட்பாடு பற்றி நிறைய பரபரப்பு இருக்கிறது. ஆனால் முதலில் அவர்களுக்கு அனைத்து சூழ்நிலைகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் திறமை வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் போட்டியில் ஓலி போப் அபாரமாக விளையாடினார். அதற்கான பாராட்டுக்கள் இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் பேஸ்பால் நீண்டகாலம் வேலை செய்யும் என்று நான் கருதவில்லை”
இதையும் படிங்க: இனிமேலும் ஜோ ரூட் மொக்கையான பஸ்பால் ஆட்டத்தை விளையாடுவாரா? மெக்கல்லம் பதில்
“களத்திற்கு சென்றதும் ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டும் என்பதை மெக்கல்லம் செய்வார். ஸ்டோக்ஸ் அவ்வாறு பேட்டிங் செய்யக்கூடியவர். ஆனால் அனைவராலும் அவ்வாறு வெற்றிகரமாக செயல்பட முடியாது. சில நேரங்களில் நீங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும். ஆம் இந்த தொடர் ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் பேஸ்பால் விளையாடினால் நாங்களும் விளையாடுவோம். குறிப்பாக ஜெய்ஸ்மால் மற்றும் சர்பராஸ் தான் ஆகியோர் பேஸ்பால் ஆட்டத்தை விளையாடினார்கள்” என்று கூறினார்.