விராட் கோலி செல்ஃபிஷா.. அதை பற்றி தெரியாதவங்க பேசாதீங்க.. விமர்சனங்களுக்கு ஸ்ரீகாந்த் பதிலடி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. புனேவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடி 257 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66, தன்சித் ஹசன் 53 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 48, சுப்மன் கில் 53 ரன்கள் அடித்து ஆரம்பத்திலேயே நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். அதை வீணடிக்காமல் அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி சதமடித்து 103* ரன்களும் கேஎல் ராகுல் 34* ரன்களும் எடுத்து 41.3 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் பதிலடி:
அதனால் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பின் களமிறங்கிய விராட் கோலி ஆரம்பத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கினார். குறிப்பாக அவர் 85 ரன்களில் இருந்த போது இந்தியா வெற்றி பெற 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் சதத்தை தொட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் மறுபுறம் பெரிய மனதை காட்டிய ராகுல் 34* ரன்களுக்கு மேல் வாய்ப்பு கிடைத்தும் சிங்கிள்களை கூட எடுக்காமல் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். அதை பயன்படுத்திய விராட் கோலி கடைசியில் சிக்ஸருடன் சிறப்பான சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் அந்த சமயத்தில் அணியின் வெற்றியை மட்டும் பார்க்காமல் சொந்த சாதனைக்காக விராட் கோலி விளையாடியதாக தற்போது சமூகவலைதளங்களில் ஒரு தரப்பு ட்ரெண்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலியை சுயநலமானவர் என்று கூறுபவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி தெரியாதவர்கள் என முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி என்ன தவறு செய்தார்? இங்கே கிரிக்கெட்டை புரியாமல் விமர்சிப்பவர்களிடம் நான் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் உலகக் கோப்பையில் ஒரு சதமடிப்பது மிகப் பெரிய விஷயமாகும்”

“எனவே விராட் கோலி இதற்கும் இதையும் தாண்டிய பல சதங்களுக்கும் தகுதியானவர். அதே சமயம் அவருக்காகவும் அணிக்காகவும் விளையாடிய ராகுலுக்கு பாராட்டுக்கள். அவர் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடிப்பதற்கு தகுதியானவர். உங்களால் முடிந்த வரை மகிழுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement