2வது டெஸ்டில் அவருக்கு பதிலா அஸ்வின் கண்டிப்பா விளையாடனும்.. ஸ்ரீகாந்த் முக்கிய கருத்து

Kris Srikkanth
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. அதன் காரணமாக விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் வேணும்:
குறிப்பாக சுழலுக்கு சாதகமற்ற தென்னாப்பிரிக்க மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட் மட்டுமே எடுத்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய காரணத்தால் 2வது போட்டியில் அஸ்வின் நீக்கப்பட்டு காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சர்துள் தாக்கூருக்கு பதிலாக 19 ஓவரில் வெறும் 41 ரன்கள் மட்டும் கொடுத்து துல்லியமாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேண்டும் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதும் அஸ்வினை விளையாடுவேன். குறிப்பாக சர்துள் தாக்கூருக்கு பதிலாக அஸ்வின் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன்”

- Advertisement -

“ஒருவேளை அவர் 5 விக்கெட்கள் எடுக்காவிட்டாலும் சில விக்கெட்டுகளை எடுப்பார். ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து அவர் நெருக்கமான லைன்களை வீசுவார். எனவே இந்த 2 ஸ்பின்னர்களும் சேர்ந்து உங்களுக்கு 4 – 5 விக்கெட்கள் எடுப்பார்கள். அதுவே நமக்கு அதிகமாக இருக்கும். அஸ்வின் நமக்கான வேலையை செய்து கொடுப்பார். நீங்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்த 2 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

“எனவே சர்துல் தாகூரை நான் நீக்குவேன். ஏனெனில் அறிமுகப் போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணாவை ஒரு போட்டியுடன் நீக்குவது நியாயமற்றது. அவர் ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாடியுள்ளார். அறிமுக போட்டியுடன் ஒருவரை நீக்குவது நியாயமற்றது. எனவே சர்துல் தாக்கூர் தான் அணிக்கு பொருத்தமற்றவர்” என்று கூறினார். இருப்பினும் அஷ்வினுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய்ப்பு கொடுப்பது கடினமாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement