தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 27ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு 25வது போட்டி நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கோவை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய சேலத்துக்கு 8.2 ஓவரில் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த துவக்க வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடத் தவறிய அந்த ஜோடியில் வைசால் வித்யா 36 (33), கேப்டன் அபிஷேக் 20 (22) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த சுதன் சஞ்சீவி 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
த்ரில் வெற்றி:
இருப்பினும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் அதிரடியாக விளையாடி 43 (30) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஹரிஷ் குமார் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 42* (19) ரன்கள் குவித்து மிரட்டலான ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் சேலம் 171/4 ரன்கள் எடுத்தது. கோவை சார்பில் அதிகபட்சமாக சுப்பிரமணியன் 2 விக்கெட் எடுத்தார்.
அதன் பின் 172 ரன்களை துரத்திய கோவை அணிக்கு சுரேஷ்குமார் 14 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சனும் 22 (16) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சுஜய் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த முகிலேஷ் 14, அத்திக் உர் ரஹ்மான் 10 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினர்.
அப்போது வந்த கேப்டன் சாருக்கான் அதிரடியாக விளையாடினார். அதனால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட கோவைக்கு மறுபுறம் 48 (39) ரன்களில் குவித்த சுஜய் முக்கிய ரன்களில் ரன் அவுட்டானார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ராம் அரவிந்த் 1, முகமது 0 ரன்களில் அவுட்டாகி சொதப்பியதால் கோவையின் வெற்றி கேள்விக்குறியானது.
அதே போல மறுபுறம் சொதப்பாமல் மிரட்டலாக சொல்லி அடித்த ஷாருக்கான் 1 பவுண்டரி 50 (18) ரன்களை 277.78 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய ஷாருக்கான் ஃபினிஷிங் செய்யாமல் அவுட்டானார். அப்போது 19வது ஓவரை வீசிய அனுசிக் ஸ்ரீனிவாஸ் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து கோவைக்கு மெகா அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் கடைசி ஓவரில் கோவைக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே யுதீஸ்வரன் 0 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: முதல் இலங்கை டி20 போட்டியில் நீக்கப்பட்ட தமிழக வீரர்.. சொதப்பல் வீரருக்கு இடம்.. இந்தியாவின் பிளேயிங் லெவன்
அப்போது கடைசி பந்தில் மணிமாறன் பவுண்டரி அடித்ததால் 20 ஓவரில் 175/9 ரன்கள் எடுத்த கோவை 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதனால் சேலத்துக்கு அதிகபட்சமாக பொய்யாமொழி 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து கோவை 7 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் ஏற்கனவே வெளியேறிய சேலம் 7 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்தது.



