
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டி முடிந்ததும் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இரண்டு நல்ல போட்டிகளில் விளையாடினோம். ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இரண்டு போட்டியிலும் எப்படி நாம் ஆடினோம் என்பதை நான் நன்றாக பார்த்தேன். 197-8 என்ற நிலையில் இருந்து 270 ரன்கள் விட்டது இந்த போட்டியில் நாங்கள் செய்த தவறு. பேட்டிங்கில் இன்று எங்களுக்கு பிரச்சனை இருந்தது.
ஆனால் ரவீந்திர ஜடேஜாவும், நவதீப் சைனி மற்றும் ஸ்ரேயஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர். இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக நாங்கள் சாதிக்கவில்லை. ஆனால் அழுத்தமான நேரங்களில் நன்றாக ஆடும் வீரர்கள் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளார்கள். அது எங்களுக்கு பெரிய நிம்மதி.
இறுதிப்போட்டியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். ஏற்கனவே தொடரை இழந்து விட்டோம். இறுதிப்போட்டியில் தோல்வி பற்றி கவலைப்படாமல் ஆட முயற்சிப்போம். இது ஒவ்வொரு தனிநபர்களை பொருத்தது. அற்புதமாக விளையாடிய ஜடேஜா மற்றும் ஸைனி ஆகிய இருவருக்கும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை அவர்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.