இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மேத்யூ வேட் 80 ரன்களை குவித்தார். மேக்ஸ்வெல் 54 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் ஏற்கனவே இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விராட்கோலி 61 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் என 85 ரன்கள் குவித்து போராடினார். அவரை தவிர மற்ற வீரர்கள் பெரிதளவு ரன்களை குவிக்க முடியவில்லை.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : ஒருகட்டத்தில் ஹார்டிக் பாண்டியா அடிக்க ஆரம்பித்ததும் நாங்கள் இந்த இலக்கை எட்டி விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக ரன் ரேட்டை மெயின்டெய்ன் செய்யவில்லை. சற்று அதிகமான இலக்கினை எதிர்த்து ஆடுகையில் இந்த வித்தியாசம் இறுதியில் பாதகமாக அமைந்தது .
பாண்டியாவுடன் விளையாடும் போது 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவிப்பது என்பது மிகவும் எளிதானது. நாங்கள் எதிரணியை சற்று பயமுறுத்தும் அளவிற்கு கம்பேர் கொடுத்தோம். ஆனாலும் இறுதிவரை அதனை கொண்டு சென்று வெற்றி இலக்கை கடக்க தவறி விட்டோம். இந்த போட்டியில் ரசிகர்களின் வரவேற்பு எங்களுக்கு அதிகமாக இருந்தது. அவர்களது மோட்டிவேஷன் எங்களது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர உதவுகிறது.
இருப்பினும் இந்த தொடரை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வருட இறுதியில் வெற்றியுடன் இருப்பது மகிழ்ச்சி இதனை அப்படியே டெஸ்ட் தொடரிலும் தொடருவோம் என்று நம்புகிறேன். மைதானத்தில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு சிறப்பாக இருந்தது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.