கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இடையே கடும் தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு வீரர்கள் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விடயம் தற்போது நாட்டின் எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியிலிருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டாலும் இந்த மோசமான சம்பவம் இந்தியா முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராணுவ வீரர்களின் இந்த உயிரிழப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய இராணுவ வீரர்களின் மரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
Salute and deepest respect to the soldiers who sacrificed their lives to protect our country in the Galwan Valley. NO one is more selfless and brave than a soldier. Sincere condolences to the families. I hope they find peace through our prayers at this difficult time. 🙏
— Virat Kohli (@imVkohli) June 17, 2020
அதில் “நாட்டைக் காப்பாற்றுவதற்காக தங்களது இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு வீர வணக்கமும் மரியாதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, “தங்களைப் பற்றி கவலைப்படாமல் வீரமாக பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு ஈடு-இணையே இல்லை”, அவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபங்கள். இந்நேரத்தில் எங்களுடைய பிரார்த்தனைகள் அவர்களது குடும்பத்திற்கு துணை நிற்கும் என நம்புவதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Salute to our REAL HEROES who laid their lives protecting and honouring our border. May god give their families utmost strength #GalwanValley
— Rohit Sharma (@ImRo45) June 17, 2020
மேலும் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா : “நாட்டைக் காப்பாற்றுவதற்காக எல்லையில் உயிரைவிட்ட உண்மையான கதாநாயகர்களுக்கு என்னுடைய வீர வணக்கங்கள்”, “அவர்களின் குடும்பத்தாருக்கு கடவுள் நம்பிக்கையும் தைரியமும் கொடுக்க வேண்டுகிறேன்” என ட்விட்டரில் அனுதாபம் தெரிவித்து உள்ளார். இவர்களது ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.