சொக்கத்தங்க மனசு! தனது 100வது டெஸ்டில் விராட் கோலி செய்த மனதை தொட்ட காரியம் – வீடியோ உள்ளே

Kohli
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் 574/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவிந்திர ஜடேஜா சதமடித்து 175* ரன்கள் குவித்தார். அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் சதத்தை நழுவ விட்டாலும் 96 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இந்தியா எளிதான வெற்றி:
இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆரம்பம் முதலே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அந்த அணிக்கு அதிகபட்சமாக நிசங்கா 61* ரன்கள் எடுக்க இதர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் வெறும் 174 ரன்களுக்கு சுருண்ட இலங்கை ஃபாலோ-ஆன் பெற்றது. இந்தியா சார்பில் பேட்டிங் போலவே பந்துவீச்சிலும் மிரட்டிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 400 என்ற மிகப்பெரிய ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை வீரர்கள் தோல்வியை தவிர்க்க போராடாமல் அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தங்களின் அனைத்து விக்கெட்களையும் பறி கொடுத்ததால் அந்த அணி வெறும் 178 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

விராட் கோலியின் 100வது டெஸ்ட்:
முன்னதாக இந்த போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி வைத்து காலப்போக்கில் இந்திய பேட்டிங் துறையில் ரன் மெஷினாக பல வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2014 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்டு தொடர்ந்து 5 வருடங்களாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்தார்.

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 40 வெற்றிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் விளையாடிய இந்த 100வது மைல்கல் போட்டியில் அவருக்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு தொப்பியை பரிசளித்து ராகுல் டிராவிட் கௌரவப்படுத்தினார்.

- Advertisement -

மனதை வென்ற கிங் கோலி:
இப்போட்டியில் ரசிகர்களின் பலத்த ஆரவாரம் மற்றும் கரகோஷத்திற்கிடையே தனது தாய், மனைவி மற்றும் குழந்தைக்கு முன்னிலையில் பேட்டிங் செய்த அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் 45 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்த போட்டியில் இந்தியா பீல்டிங் செய்ய களமிறங்கிய போது அவரை கூப்பிட்ட கேப்டன் ரோகித் சர்மா இருபுறமும் இந்திய வீரர்களின் புடை சூழ கைதட்டி பாராட்டி கௌரவ படுத்தினார். மொத்தத்தில் 100வது மைல்கல் போட்டியில் பல சிறப்பான தருணங்களை விராட் கோலி கடந்தார்.

இருப்பினும் இந்த போட்டி முடிந்த பின்னர் அவர் செய்த செயல் ஒன்று ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. ஆம் இந்த போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் மொகாலி மைதானத்தை விட்டு பேருந்து வாயிலாக கிளம்பிக் கொண்டிருந்த விராட் கோலியை பார்ப்பதற்கு “தரம்வீர்” எனும் அவரின் தீவிர மாற்றுத்திறனாளி ரசிகர் நீண்ட நேரமாக காத்திருந்தார். தனது 100ஆவது போட்டியை முழுமையாக மைதானத்திலிருந்து பார்த்து தமக்கு ஆதரவு அளித்த அந்த ரசிகர் தம்மை பார்ப்பதற்காக மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததை அறிந்த விராட் கோலி தனது கையொப்பமிட்ட டி-ஷர்ட் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார்.

- Advertisement -

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி தரம்வீர் எனும் அந்த ரசிகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “வாவ் ! விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் எனக்கு அவர் தனது கையொப்பமிட்ட டி-சர்ட்டை பரிசளித்துள்ளார். இது எனது வாழ்நாளில் மிகச் சிறந்த நாள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஜடேஜாவின் சிறப்பான இன்னிங்ஸ் இது இல்லை – ரவீந்திர ஜடேஜாவின் சாதனை பற்றி சர்ச்சையாக பேசிய கம்பீர்

குஜராத் மாநிலம் குவாலியர் நகரைச் சேர்ந்த இவர் கடந்த பல வருடங்களாக இந்தியா விளையாடும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் நேரில் சென்று பார்த்து ஆதரவு அளித்து வருகிறார். விராட் கோலியின் தீவிர ரசிகரான இவரை இந்திய அணியின் 12வது வீரர் என இதர ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். இவருக்கு ஏற்கனவே புகைப்படம், ஆட்டோகிராப் போன்ற பல நினைவு பரிசுகளை விராட் கோலி வழங்கியுள்ளார். பொதுவாகவே இதுபோன்ற ரசிகர்களிடம் எப்போதும் அன்பாக நடந்து கொள்ளும் விராட் கோலி தனது 100வது போட்டியில் செய்துள்ள இந்த செயலை பார்த்த ரசிகர்கள் “அவருக்கு சொக்கத் தங்க மனசு” என மனதார பாராட்டி வருகிறார்கள்.

Advertisement