ஜடேஜாவின் சிறப்பான இன்னிங்ஸ் இது இல்லை – ரவீந்திர ஜடேஜாவின் சாதனை பற்றி சர்ச்சையாக பேசிய கம்பீர்

gambhir
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

Jadeja-1

- Advertisement -

அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை அபாரமாக எதிர்கொண்டு கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து சதமடித்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்கள் விளாசினார். அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 96 ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ரன்களும் எடுத்தனர்.

மிரட்டிய ரவீந்தர ஜடேஜா:
இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு பேட்டிங்கில் ரன்கள் குவித்து மிரட்டிய ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சிலும் தொல்லை கொடுத்தார். அந்த அணியின் கேப்டன் கருணரத்னே உள்ளிட்ட அனைத்து வீரர்களும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 174 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக இலங்கைக்கு நிஷாங்கா 61* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்ற இலங்கை 2வது இன்னிங்சிலும் அதேபோல பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 178 ரன்களுக்கு மீண்டும் ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் மீண்டும் பந்துவீச்சில் அசத்திய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். இப்போட்டியில் 175* ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

உள்ளூரில் அடிப்பது பெரிதல்ல:
இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அபாரமாக செயல்பட்ட அவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர் என்ற மகத்தான பெருமையை பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். மேலும் இந்த 175* ரன்கள் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மிகச்சிறந்த ஸ்கோரை ரவீந்திர ஜடேஜா பதிவு செய்துள்ளார்.

Gambhir

இந்நிலையில் சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்தது பெரிய விஷயம் அல்ல என ரவீந்திர ஜடேஜாவை பற்றி முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது அவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என எனக்கு தோன்றவில்லை. இதற்கு முன் ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவுக்கு வெளியே நடந்த வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த ரன்களே அவருக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்து இருக்கும். எப்போதுமே புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்லாது” என கூறினார்.

வெளிநாட்டில் அடிப்பதே உண்மை:
“அவர் சதம் அடித்த பின் டீ சில்வா, அசலங்கா, எம்புல்தெனியா போன்ற இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி ரன்களை எளிதாக கறந்தார். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடிக்கும் 40 – 50 ரன்கள் இந்த மிகப்பெரிய இன்னிங்சை விட அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும்” என இதுபற்றி கௌதம் கம்பீர் மேலும் கூறினார்.

Ravindra Jadeja

இந்த போட்டியில் 175 ரன்களை விளாசிய ரவீந்திர ஜடேஜா ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். ஆனாலும் இலங்கை போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக அதுவும் சொந்த மண்ணில் 175 ரன்கள் அடிப்பது ஒரு மிகப் பெரிய விசயமல்ல, வெளிநாட்டு மண்ணில் தரமான பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கும் 40 – 50 ரன்கள் தான் உண்மையான திறமையை சோதிக்கும் அம்சம் என கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல இந்த தொடரில் இலங்கை பந்துவீச்சாளர்கள் ஒரு உள்ளூர் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களை போல மோசமாக பந்து வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement