- Advertisement -
ஐ.பி.எல்

அவருக்கு உலககோப்பை டீம்ல சான்ஸ் கொடுக்கலனா, இழப்பு இந்திய அணிக்கு தான் – விராட் கோலி ஓபன்டாக்

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் மிகுந்த பரபரப்புடன் நடைப்பெற்ற அப்போட்டியில் டெல்லியை தோற்கடித்த பெங்களூரு 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189/5 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டு பிளேஸிஸ் 8 (11), அனுஜ் ராவத் 0 (1), விராட் கோலி 12 (14) என டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் 40/3 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது.

அந்த நேரத்தில் அதிரடியாக விளையாடிய கிளேன் மேக்ஸ்வெல் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 55 (34) ரன்கள் விளாசி ஆட்டமிழக்க அடுத்து வந்த பிரபுதேசாய் 6 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 92/5 என மீண்டும் மிடில் ஓவரில் பெங்களூரு தடுமாறியது.

- Advertisement -

தமிழக தங்கம் டிகே:
அந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் இருந்தே டெல்லி பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். தொடர்ந்து பவுண்டரிகளை பறக்கவிட்ட அவரின் பெயரை டிகே டிகே என வான்கடே மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விண்ணதிர முழங்க அந்த எனர்ஜியுடன் பட்டாசாக வெடித்த அவர் வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஒரே ஓவரில் 4, 4, 4, 6, 6, 4 என 28 ரன்களை தெறிக்க விட்டு தடுமாறிய பெங்களூருவை தூக்கி நிறுத்தினார்.

அவருக்கு உறுதுணையாக நின்ற சபாஸ் அஹமத் அதிரடியாக 32* (21) ரன்களும் கடைசிவரை டெல்லியை பிரித்து மேய்ந்த தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 66* (34) ரன்களும் எடுத்து வெறித்தமான பினிஷ் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 190 என்ற இலக்கைத் துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

பெங்களூரு வெற்றிநடை:
இதில் பிரிதிவி ஷா 16 (13) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 66 (38) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னாடியே மிட்செல் மார்ஷ் 14 (24) ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த ரோவ்மன் போவல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில் அதைத் தொடர்ந்து வந்த இளம் வீரர் லலித் யாதவ் 1 ரன்னில் அவுட்டாகி அதைவிட அதிர்ச்சி அளித்தார். இதனால் 115/5 என தடுமாறிய டெல்லிக்கு கடைசி நேரத்தில் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 34 (17) ரன்கள், ஷார்துல் தாகூர் 17 (9) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 173/7 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி வெற்றி நடைபோடுகிறது. இந்த அபார வெற்றிக்கு 66* ரன்கள் எடுத்து பினிஷெராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இழப்பு இந்தியாவுக்கே:
இந்த போட்டி மட்டுமல்லாது இந்த வருடம் பங்கேற்ற 6 போட்டிகளில் அவர் முறையே 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14), 66* (34) என கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 5 போட்டிகளில் கடைசி வரை அவுட்டே ஆகாமல் 197 ரன்களை 209.57 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணிகளை புரட்டி எடுத்து பெங்களூருவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இப்படி அபாரமாக செயல்பட்டு வரும் அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடுவதே தனது லட்சியம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதைத்தான் நேற்றே முடிந்தபின் மீண்டும் தெரிவித்த அவர் டி20 உலக கோப்பையில் விளையாடி இந்தியாவிற்காக கோப்பையை வெல்வதே தனது மிகப்பெரிய இலக்கு என்று கூறினார்.

இதுபற்றி அவருக்கு ஆதரவாக நேற்றைய போட்டி முடிந்த பின் இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் பெங்களூரு நட்சத்திரம் விராட் கோலி பேசியது பின்வருமாறு.”டிகே மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் டி20 கிரிக்கெட்டில் பெங்களூருவுக்காக மட்டுமல்ல இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் தன்னை நிரூபித்துள்ளார்” என்று பாராட்டினார். இதுமட்டுமல்லாமல் தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பையில் விளையாடமல் போனால் அது இந்தியாவுக்கு தான் இழப்பே தவிர அவருக்கு அல்ல என பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

கடைசியாக கடந்த 2018 – 2019 காலகட்டத்தில் இந்தியாவிற்காக டி20 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதில் 13 இன்னிங்ஸ்களில் 56.5 பேட்டிங் சராசரி ரன்களை 161.4 என்று அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அதுவும் 6 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி எடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் இவ்வளவு சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் உலக அளவில் வேறு எந்த வீரரும் எடுத்ததில்லை என்ற போதிலும் காரணமே இல்லாமல் அவர் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க : எதிர்களாய் இருந்து ஐ.பி.எல் தொடரின் மூலம் நண்பர்களான 5 ஜோடி – இந்தாண்டு என்ட்ரி கொடுத்த புது ஜோடி

இருப்பினும் தற்போது அதைவிட மிரட்டலாக செயல்பட்டு தன்னை இந்தியாவிற்கு விளையாட தகுதியானவன் என நிரூபித்து தேர்வுக்குழுவின் கதவை தட்டும் அவரை இந்தியா தேர்வு செய்யவில்லையெனில் அது இந்தியாவிற்கு தான் இழப்பே தவிர அவருக்கு கிடையாது என்பதே நிதர்சனம்.

- Advertisement -
Published by