அவர் அற்புதமான பேட்ஸ்மேன், இந்தியாவையும் கேப்டனாக அபாரமாக வழி நடத்துவார் – ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆண்டி ஃப்ளவர் பாராட்டு

Andy Flower
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறி வந்தார். இருப்பினும் 2018, 2019 தொடர்களில் அடுத்தடுத்து பஞ்சாப் அணியில் 500 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் இந்திய அணியிலும் சிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராக உருவெடுத்தார். மேலும் இளம் வீரராக இருப்பதால் அவரை அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்தது.

ஆனால் நாளடைவில் அந்த இடத்தையும் 17 கோடியாக உயர்ந்த தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொள்வதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர் சுயநலமாக செயல்படுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். போதாக்குறைக்கு 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் பார்மை இழந்து தடுமாறிய அவர் அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

இந்தியாவின் கேப்டன்:
அதனால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐயும் டி20 கிரிக்கெட்டில் அவரை கழற்றி விட்டு துணை கேப்டன் பதவியை பறித்து ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி அவர் அதே போல் செயல்பட்டால் தான் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தடுமாறினாலும் விரைவில் ஃபார்மை மீட்டெடுத்து அபாரமாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக அசத்தும் அளவுக்கு கேஎல் ராகுல் உயர்வாரென்று முன்னாள் ஜிம்பாவே ஜாம்பவான் வீரர் ஆண்டி பிளவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராகுல் கேப்டனாக இருக்கும் லக்னோ அணியில் பயிற்சியாளராக இருப்பதால் அவரை அருகிலிருந்து பார்த்து அவரது திறமைகளை உணர்ந்துள்ள ஆண்டி பிளவர் அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுல் ஒரு சூப்பரான பேட்ஸ்மேன் என்பதுடன் பார்ப்பதற்கு அழகாக விளையாடக் கூடியவர். அவர் பேட்டிங் செய்வதை நான் எப்போதுமே விரும்பி பார்ப்பேன். இங்கிலாந்து அணிக்காக நான் பயிற்சியாளராக இருந்த போது தான் முதல் முறையாக அவரைப் பார்த்தேன். குறிப்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். அதிலிருந்தே நான் அவரை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்”

“மேலும் மிகச் சிறந்த இளம் வீரராக இருக்கும் அவருக்குள் நல்ல தலைவரும் இருக்கிறார். அவர் எப்போதுமே அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்கக்கூடிய நல்ல கேப்டன். அவர் சக அணியினரை மதிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடன் தற்போது வேலை செய்வது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ராகுல் இந்தியாவை வருங்காலங்களில் சிறப்பாக வழி நடத்தும் அளவுக்கு மிகச்சிறந்த கேப்டன் என்பதையும் நான் அறிவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs SL : சொந்த மண்ணில் சச்சினின் சாதனையை தகர்த்து பிரமாண்டம் படைத்த விராட் கோலி – விவரம் இதோ

இருப்பினும் 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ராகுல் முதல் போட்டியிலேயே தோல்வியை பதிவு செய்து பின்னர் நடந்த ஒருநாள் தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் வைட் வாஷ் தோல்வியை இந்தியா பதிவு செய்யும் அளவுக்கு சுமாராகவே கேப்டன்ஷிப் செய்தார். இருப்பினும் வருங்காலங்களில் அவர் இந்தியாவின் கேப்டனாக வரும் அளவுக்கு உயர்வார் என்று ஆண்டி ப்ளவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் திருமணம் செய்ய காத்திருக்கும் ராகுல் அதற்கு முன்பாக ஜனவரி 15ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement