இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி அந்த தொடரில் இருந்து வெளியேறியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் அந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் வழிநடத்தி வருகிறார்.
கேப்டன் பதவி வேண்டாம் :
ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியின் போது லக்னோ அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்த வேளையில் மைதானத்திலேயே அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கே.எல் ராகுலை மைதானத்திலேயே கடுமையாக பேசியிருந்தார்.
அது குறித்த வீடியோவும் வெளியாகி அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடுவாரா? அல்லது அந்த அணியிலிருந்து விலகுவாரா? என்றெல்லாம் கூட கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் கே.எல் ராகுல் தொடர்ந்து லக்னோ அணியில் இடம்பெற்று விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் அவர் ஒரு நிபந்தனையுடன் அந்த அணியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இனி தான் லக்னோ அணிக்கு கேப்டனாக இருக்க மாட்டேன் என்றும் ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட போவதாக உரிமையாளரிடம் கே எல் ராகுல் கூறியதாக கூறப்படுகிறது.
அதற்கு லக்னோ அணியின் உரிமையாளரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி முழுநேர பேட்ஸ்மேனாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : எனக்கு டி20 மட்டும் போதாது.. அந்த பார்மேட்லயும் எனக்கு கிரிக்கெட் விளையாட ஆசை – சூரியகுமார் யாதவ் விருப்பம்
அப்படி கே.எல் ராகுல் கேப்டன் பதிவியிலிருந்து வெளியேறினால் அந்த அணியில் உள்ள மற்றொரு நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரான் லக்னோ அணியை கேப்டனாக வழி நடத்துவார் என்று தெரிகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டிலும், வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலும் ஏற்கனவே பூரான் கேப்டனாக இருந்துள்ளதால் அவருக்கு அந்த கேப்டன் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



