
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 200 ரன்களை சேசிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, கிசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 2/3 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.
சிக்ஸருக்காக ஏமாற்றம்:
ஆனால் நாங்கள் இருக்கும் வரை அது நடக்காது என்ற வகையில் அடுத்ததாக ஜோடி சேர்ந்து மூழ்கிய இந்தியாவை நங்கூரமாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய விராட் கோலி சாதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரியுடன் 85 (116) ரன்கள் ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 97* (115) ரன்கள் விளாசி 41.2 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இருப்பினும் விராட் கோலி தவறவிட்ட சதத்தை ராகுலும் தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சொல்லப்போனால் 41வது ஓவரின் முடிவில் இந்தியா 195 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் 91* ரன்களில் இருந்தார். அப்போது முதல் பந்தை எதிர்கொண்டு ரன் எடுக்காத அவர் 2வது பந்தை பவுண்டரி அடித்து பின்னர் சிக்சர் அடிக்கலாம் என்ற நோக்கத்துடன் சற்று மெதுவாக அடித்தார்.
இருப்பினும் தம்மையே அறியாமல் அற்புதமான டைமிங் கொடுத்ததால் பட்ட வேகத்தில் பந்து சிக்ஸர் சென்றதால் சதத்தை தொட முடியாத ராகுல் 97* ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் சிக்ஸர் அடித்து ஃபினிஷிங் செய்ததால் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் அப்படியே களத்தில் உட்கார்ந்து ஏமாற்றமான சிரிப்பை வெளிப்படுத்தினார். அது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.
“அந்த ஷாட்டை நான் சற்று அதிகமாக சிறப்பாக அடித்து விட்டேன். குறிப்பாக கடைசியில் நான் 100 ரன்கள் அடிக்கலாம் என்று கணக்கு போட்ட அதைத் தொடுவதற்கு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அது மட்டுமே வழியாக இருந்தது. இருப்பினும் இறுதியில் பந்து சிக்சர் சென்றதால் அந்த 100 ரன்களை தொடாததில் எந்த கவலையும் இல்லை. இன்னொரு நாள் இதே போல சிக்ஸருடன் சதமடிக்க முயற்சிப்பேன் ” என்று கூறினார்.