
எதிர்பாரா திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பையை தோற்கடித்த லக்னோ 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் குயின்டன் டி காக் 10 (9) மணிஷ் பாண்டே 22 (22) மார்கஸ் ஸ்டோனிஸ் 0 (3) க்ருனால் பாண்டியா 1 (2) தீபக் ஹூடா 10 (9) ஆயுஷ் படோனி 14 (11) என அனைத்து வீரர்களும் வரிசையாக சொற்ப ரன்களில் சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளை எடுத்து லக்னோவுக்கு பின்னடைவை கொடுத்தனர்.
ஆனால் மறுபுறம் மூழ்கும் கப்பலை தூக்கி நிறுத்தும் நங்கூரத்தை போல மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் முதல் ஓவரியிலிருந்தே நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை சேர்த்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அவரை அவுட் செய்ய மும்பை கேப்டன் ரோகித் சர்மா வகுத்த அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 4 சிக்சர்கள் அடித்து 103* (62) ரன்கள் விளாசினார். மும்பை சார்பில் பொலார்ட் மற்றும் மெரிடித் மெரிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மும்பை பரிதாபம்:
அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 39 (31) ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதை வீணடிக்கும் வகையில் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசான் 8 (20) தேவால்டு ப்ரேவிஸ் 3 (5) நம்பிக்கை நட்சத்திரம் 7 (7) சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் 67/4 என சரிந்த மும்பையை நடுவரிசையில் பொல்லார்ட் உடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து வெற்றிக்கு போராடிய இளம் வீரர் திலக் வர்மா 38 (27) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். அந்த நிலைமையில் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட்டும் 19 (20) ரன்களில் அவுட்டாகி கைவிட்டதால் 20 ஓவர்களில் 132/8 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோற்று 8-வது தொடர் தோல்வியை பெற்றது.
மும்பை எனக்கு தூசி:
இந்த வெற்றிக்கு தனி ஒருவனை போல சதமடித்து 103* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதைவிட 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பையை கண்டால் உங்களுக்கு தான் பயமேயன்றி எனக்கு இல்லை என்பது போல் அவர் ஒரு சில சூப்பரான சாதனைகளை படைத்துள்ளார். அதை பற்றி பார்ப்போம்.
1. ஏற்கனவே மும்பைக்கு எதிராக 2 சதங்களை அடித்துள்ள அவர் இந்தப் போட்டியில் 3-வது சதத்தை விளாசினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 3 அல்லது அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி, கிறிஸ் கெய்ல் போன்றவர்கள் கூட படைக்காத புதிய சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் : 3, மும்பைக்கு எதிராக.
2. விராட் கோலி : 2, குஜராத்துக்கு எதிராக.
3. டேவிட் வார்னர் : 2, கொல்கத்தாவுக்கு எதிராக.
4. கிறிஸ் கெயில் : 2, பஞ்சாப்க்கு எதிராக.
2. அதிலும் ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 24 என இந்த வருடம் மும்பைக்கு எதிரான 2 போட்டிகளிலும் சதம் அடித்துள்ள (103* & 103*) கேஎல் ராகுல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 2 சதங்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலிக்கு பின்பு படைத்தார். கடந்த 2016இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி இதேபோல் 2 சதங்களை (109 & 100*) அடித்து முதல் முறையாக சாதனை படைத்தார்.
3. அதேபோல் மும்பைக்கு எதிராக அதிக 50+ ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையையும் முந்திய அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் : 8*
2. சுரேஷ் ரெய்னா : 7
4. மேலும் ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை (4) வென்ற வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
5. அத்துடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 சதங்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 3-வது இடத்தை ஜோஸ் பட்லர், ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் 2 இடங்களில் கிறிஸ் கெயில் (6), விராட் கோலி (5) ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் மிகமோசமான சாதனையை படைத்து முதல் அணியாக வெளியேறும் மும்பை – விவரம் இதோ
6. இந்த சதத்தையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையையும் கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. ரோஹித் சர்மா/கேஎல் ராகுல் : 6
2. விராட் கோலி : 5
3. சுரேஷ் ரெய்னா : 4