கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த கே.எல் ராகுல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியின் போது லக்னோ அணியின் மோசமான செயல்பாட்டால் கோபமடைந்த அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் வைத்தே கே.எல் ராகுலை கடுமையாக திட்டியிருந்தார். அந்த விவகாரம் அப்போதே பெரிய அளவில் வைரலானது.
டெல்லி அணிக்காகவும் தியாகியாக மாறிய கே.எல் ராகுல் :
அதன் காரணமாக அவருக்கும் லக்னோ அணி நிர்வாகத்திற்கும் இடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து லக்னோ அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட அவர் மெகா ஏலத்தில் கலந்து கொண்டார். கே.எல் ராகுலுக்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது கே.எல் ராகுலை இந்திய மதிப்பில் சுமார் 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
தற்போதைய டெல்லி அணியில் பெரிய அனுபவ வீரர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பும் வழங்க அந்த அணி நிர்வாகம் முன் வந்தது. ஆனால் தான் டெல்லி அணிக்காக ஒரு வீரராக மட்டுமே விளையாட விரும்புவதாகவும், கேப்டன் பதவி வேண்டாம் என்றும் கேஎல் ராகுல் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணிக்காக எவ்வாறு அவர் அணி நிர்வாகம் கொடுக்கும் இடங்களை எல்லாம் சகித்துக் கொண்டு அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்து வருகிறாரோ அதேபோன்று டெல்லி அணிக்காகவும் ஒரு தியாகத்தை செய்ய இருக்கிறார். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக மட்டுமே விளையாடி வரும் அவர் தற்போதைய டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் காரணமாக அதை சரிசெய்ய மிடில் ஆர்டரில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் தற்போதைய டெல்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரல் போன்ற டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்களாக இருப்பதினால் மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர் தேவைப்படுகிறது. அதோடு ஹாரி புரூக் 2 ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் தடை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாகவும் அனுபவம் வாய்ந்த வீரரான கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட இருக்கிறார்.
இதையும் படிங்க : எப்படா நாங்க தோப்போம்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. எங்களை சாதிக்க விடுங்க – ஹாரிஸ் ரவுப் ஆவேசம்
இதுவரை ஐபிஎல் தொடரில் 33 போட்டியில் மட்டுமே அவர் துவக்க வீரர் அல்லாத மற்ற இடத்தில் ஆடியுள்ளார். அப்படி விளையாடிய போட்டிகளில் 29 சராசரியுடன் 500 ரன்களையும் குவித்துள்ளார். மற்றபடி அவர் விளையாடிய அனைத்து போட்டிகளுமே துவக்க வீரராக மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை 123 போட்டியில் விளையாடியுள்ள அவர் 45 ரன்கள் சராசரியுடன் 4 683 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



