பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்ற வேளையில் கடந்த பல ஆண்டுகளாகவே அந்த அணி பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கத்துக்குட்டி அணிகள் கூட பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் அளவிற்கு அவர்களது ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் என்ற பெயரில் சிலர் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் மீது விமர்சனம் இருந்து வருகிறது.
எங்களை கொஞ்சம் முன்னேற விடுங்க : ஹாரிஸ் ரவுப்
இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர், அதற்கடுத்து 2024 டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை நடத்திய பாகிஸ்தான் அணியானது சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீக் சுற்றிலேயே ஒரு புள்ளியை கூட பெறாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியின் வீரர்களை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது அங்கு நடைபெற்று வரும் டி20 தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சீனியர் வீரர்கள் பலர் அணியிலிருந்து நீக்கப்பட்டு புதுமையான அணியுடன் அங்கு சென்றிருந்தாலும் தோல்வியையே சந்தித்து வருவது மேலும் பாகிஸ்தான் அணியின் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் எங்களை முன்னேற விடுங்கள் என்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுப் காட்டமான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டிற்குள் புதிதாக வரும் வீரர்கள் ஆரம்பத்தில் சிரமப்படுவார்கள். அதன் பின்னர் அதிகமான போட்டிகளில் விளையாடும் போது தான் அனுபவம் கிடைக்கும். இம்முறை சீனியர் வீரர்களாக இருக்கும் நாங்கள் எங்களது அணியில் ஜூனியர் வீரர்களை ஊக்குவித்து அவர்களை முன்னேற வழிவகை செய்து வருகிறோம். ஆனால் பாகிஸ்தான் அணி எப்போது தோற்கும் எப்போது விமர்சனம் செய்யலாம் என்று பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தான் அணி எப்போது தோற்றாலும் விமர்சனம் செய்து விடுகிறார்கள்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் ட்ராபி, ஐபிஎல்ல அசத்துனாலும் ஸ்ரேயாஸ்க்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்கக்கூடாது.. அஸ்வின் பேட்டி
ஆனால் தற்போது நாங்கள் இளம் வீரர்களைக் கொண்டு அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விளையாட்டில் தோல்விகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் நாங்கள் ஒரு பலமான அணியாக மீண்டும் வர வேண்டுமெனில் திறமையான இளம் வீரர்கள், அனுபவமுள்ள சீனியர் வீரர்கள் என ஒரு கலவையாக இருந்தால் மட்டுமே முடியும். எனவே எங்களை ஒரு அணியாக வளர வழி விடுங்கள் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என ஹாரிஸ் ரவுஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.