
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இடம்பெற்ற சுப்மன் கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்திய அணியில் இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தொடக்க வீரரான கே.எல் ராகுலுக்கு முதல் போட்டியின்போது வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கேஎல் ராகுல் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 84 ரன்களை குவித்தார்.
அதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் முதல் இன்னிங்சில் 129 ரன்கள் குவித்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்திருந்தார். இந்நிலையில் இவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பலரும் வெகுவாகப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சதமடித்து ஆட்டம் இழந்தது குறித்து பேசியுள்ள கேஎல் ராகுல் கூறுகையில் : இந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நான் அவுட்டாகி விதம் எனக்கே சற்று வருத்தமாக உள்ளது. ஏனெனில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இதுபோன்று விக்கெட்டை பறிகொடுத்தது வருத்தத்தைத் தரும். அந்த வகையில் நான் இன்றைய போட்டியின் முதல் செசனில் 70 முதல் 80 ரன்கள் அடிக்க திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் விரைவில் விக்கெட்டை இழந்தது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என ராகுல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதலாவது போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.