
அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது முதல் நாளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையுடன் இந்த போட்டியில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் இன்று டிசம்பர் 6-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். மேலும் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் துருவ் ஜுரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இரண்டாவது போட்டிக்கான அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர் அவர்கள் இருவருக்கு பதிலாக தானும் சுப்மன் கில்லும் விளையாடுவதாக தெரிவித்தார்.
அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் இடம் பெறுவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி இன்று துவங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தற்போது விளையாடி வரும் இந்திய அணியானது முதல் செஷனில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த போட்டியின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை ஸ்டார்க்கிடம் பறி கொடுத்தாலும் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது ஏழாவது ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலந்து வீச அந்த பந்தில் எட்ஜ் எடுத்த ராகுல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இதையும் படிங்க : முதல் போட்டியில் வம்பிழுத்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தனது ஸ்டைலில் பழி தீர்த்த மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ
பந்து பேட்டில் பட்டதை உணர்ந்த கே.எல் ராகுல் விரைவாகவே தாம் ஆட்டமிழந்ததை ஒப்புக்கொண்டு மைதானத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தார். ஆனால் சற்று நேரத்தில் அம்பயர் வேகப்பந்து வீச்சாளர் நோபால் வீசியதை உணர்ந்து நோபால் சிக்னலை காண்பித்தார். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக கே.எல் ராகுல் இந்த விக்கெட்டில் இருந்து தப்பினார்.