கேஎல் ராகுலின் ஆட்டமே இனிதான் ஆரம்பம் – விமர்சனங்களுக்கு பதிலடியுடன் முன்னாள் வீரர் பெரிய ஆதரவு

KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அட்டகாசமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் எண்ணத்துடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து அசாத்தியமான வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதே புத்துணர்ச்சியுடன் தன்னுடைய 2வது போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. அதனால் சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலிக்கும் இந்தியா நாக் அவுட் சுற்று செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது என்றே கூறலாம்.

KL-Rahul

- Advertisement -

இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக கடைசி நேரத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா வெளியேறியதால் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை ஷமி, புவனேஸ்வர் ஆகியோரது அனுபவத்தால் அசத்துகிறது. ஆனால் அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடியில் குறிப்பாக துணை கேப்டனாக விளையாடும் கேஎல் ராகுல் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது பின்னடைவை கொடுத்து வருகிறது.

ஆட்டமே இனிதான்:
2019க்குப்பின் ஷிகர் தவானை கழற்றி விட்டு ரோகித் சர்மாவின் ஓப்பனிங் ஜோடியாக நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்ட இவர் நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயத்துடன் விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி விடுகிறார். இல்லையேல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி தோல்வியை பரிசளிக்கும் அணுகு முறையில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தமான முதல் போட்டியில் 4 ரன்களில் நடையை கட்டிய அவர் நெதர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியிலும் 9 (12) ரன்களில் அவுட்டானது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

kl rahul

அதை விட 2019 உலகக்கோப்பை அரை இறுதி, 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டி, 2022 ஆசிய கோப்பை என அழுத்தமான முக்கிய போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் இவருக்கு தொடர்ச்சியாக அணி நிர்வாகம் வாய்ப்பளித்து வருவதும் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. இந்நிலையில் இப்படி சுமாராக செயல்படுவதால் அனைவரும் நினைப்பதை விட ராகுல் தரமான பேட்ஸ்மேன் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடருக்கு பின் சந்தித்த காயத்தாலேயே அவர் தடுமாறுவதாகவும் இந்த உலகக் கோப்பையில் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் அசத்துவார் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “புள்ளி விவரங்கள் சொல்வதை விட கேஎல் ராகுல் மிகச் சிறந்த வீரர் என்று நினைக்கிறேன். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் டாப் பார்மில் இருந்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் அதன்பின் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டியுள்ளது. அதனாலேயே அவர் தன்னுடைய பார்மை நிர்வகிக்க தடுமாறுகிறார். சமீப காலங்களில் அவர் சில காயங்களை சந்தித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்”.

“ஒரு வேளை அதுதான் அவருடைய தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். அதே சமயம் தற்சமயத்தில் இருக்கும் மோசமான புள்ளி விவரங்களை அவர் முன்னேற்றுவதற்கு விரும்புவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபரித வீரரான அவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அபாரமான வீரர்” என்று கூறினார். இருப்பினும் காயமடைந்து திரும்பிய பின் ஜிம்பாப்வே ஒருநாள் தொடர், ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலிய, தென்ஆப்பிரிக்க டி20 தொடர்கள் மற்றும் பயிற்சி போட்டிகள் என ஏராளமான போட்டிகளில் விளையாடியும் 2 மாதங்களாகியும் இன்னும் அவர் பார்முக்கு திரும்ப தடுமாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement